Published : 11 Jul 2025 10:46 AM
Last Updated : 11 Jul 2025 10:46 AM
சென்னை: தீய சக்திகளை அழிக்க ருத்ராட்சம் தருவதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கோயில் பூசாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணையை சேர்ந்தவர் 27 வயது இளம் பெண் ஒருவர் சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையரிடம் அண்மையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “கடந்த மாதம் 28-ம் தேதி பள்ளிக்கரணையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோயிலில், பூசாரியாக உள்ள அசோக் பாரதி (39) என்பவர் தீய சக்திகளை அழிக்க ருத்ராட்சம் தருவதாகக் கூறி என்னை வடபழனிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு கோயில் மூடப்பட்டுள்ளதாக கூறியவர், வடபழனி பக்தவத்சலம் காலனியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்” என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் மீது வடபழனி மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதேபோல், குற்றச்சாட்டுக்கு உள்ளான கோயில் பூசாரி அசோக் பாரதி, வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “பள்ளிக்கரணையை சேர்ந்த சம்பந்தப்பட்ட இளம் பெண் குடும்பப் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என என்னிடம் கூறினார்.
இதையடுத்து, அவரை நான் வடபழனியில் உள்ள எனது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். அப்போது, அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர் எங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டுகிறார்” எனத் தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT