Published : 10 Jul 2025 07:30 PM
Last Updated : 10 Jul 2025 07:30 PM
புதுடெல்லி: மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான 25 வயது ராதிகா யாதவை, அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் டெல்லி அருகே நடந்துள்ளது.
ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் இவர் விளையாடி வந்துள்ளார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 113-வது இடத்தை இவர் வகித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் பதிவிடுவதற்காக ராதிகா யாதவ் ஷூட் செய்த ரீல்ஸ் தொடர்பாக அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவரது தந்தை தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து மகளை சுட்டுள்ளார். ராதிகா யாதவ் உடலில் 3 குண்டுகள் பாய்ந்த நிலையில், அவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை செய்தித் தொடர்பு அலுவலர் சந்தீப் குமார், "ராதிகா யாதவின் தந்தை கோபத்தில் அவரை சுட்டுள்ளார். அவர் பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் பெற்றது. அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளோம்" என தெரிவித்தார்.
புகார் பதிவான காவல் நிலையத்தின் நிலைய அலுவலர் ராஜேந்திர் குமார் கூறும்போது, "மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. துப்பாக்கியால் காயமடைந்த நிலையில் ஒரு பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. நாங்கள் சென்றபோது அவர் இறந்துவிட்டார். அவரது தந்தைதான் மரணத்துக்குக் காரணம் என்பதை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினார்கள்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT