Published : 08 Jul 2025 06:20 PM
Last Updated : 08 Jul 2025 06:20 PM
புதுச்சேரி: புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தின் பின்னால் டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். அவர்களது தந்தை படுகாயம் அடைந்தார்.
வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தம், ஆனந்த விநாயகர் நகர், ரங்கசாமி வீதியை சேர்ந்தவர் நடன சபாபதி (45). அரசு கான்பெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இவர்களது இரு மகன்கள் ஜீவா (14), துவாரகேஷ் (8). இவர்கள் முத்தரையர் பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி பயின்று வந்தனர். நடன சபாபதி இன்று காலை, தனது இரண்டு மகன்களையும் பள்ளியில் விடுவதற்காக தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு ஊசுட்டேரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
ஊசுட்டேரி - பொறையூர் செல்லும் சந்திப்பு அருகே பைக் சென்றபோது, திருவக்கரையில் இருந்து மண் ஏற்றி வந்த தமிழக பதிவெண் கொண்ட டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்து, நடன சபாபதி வந்த பைக்கின் பின்பக்கம் மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சிறுவர்கள் மீது டிப்பர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நடன சபாபதி கால் நசுங்கி படுகாயமடைந்தார்.
விபத்தை கண்ட அங்கிருந்தவர்கள் காயமடைந்த தந்தை மற்றும் சிறுவர்களின் உடல்களை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தை நடனசபாபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவலறிந்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதனிடையே, புதுச்சேரி தேங்காய் திட்டு பகுதியைச் சேர்ந்த வைத்தி என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை கடலூரைச் சேர்ந்த ஜெயக் குமார் (60) என்பவர் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே விபத்து நடைபெற்ற பகுதியை சேர்ந்த மக்கள், விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த போக்குவரத்து எஸ்.பி பிரவீன்குமார் திரிபாரி, மேற்கு எஸ்.பிக்கள் வம்சிதரெட்டி, மோகன்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இப்பகுதியில் தொடர் விபத்து ஏற்படுகிறது. போலீஸார் உரியமுறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது இல்லை என்று குற்றம் சாட்டியதோடு, இப்பகுதியில் வேகத் தடைகள் அமைக்க வேண்டும், பேரிகார்டுகள் போட வேண்டும் என பலவேறு கோரிக்கை முன்வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் உடனடியாக பேரிகார்டுகளை வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். விபத்து காரணமாக ஊசுட்டேரி சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பைக் மீது டிப்பர் லாரி மோதி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT