Published : 08 Jul 2025 05:42 AM
Last Updated : 08 Jul 2025 05:42 AM
சென்னை: ஸ்டீல் நிறுவனத்துக்குள் நுழைந்து, துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஆந்திர தொழிலதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை கிண்டி, கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (54). அதே பகுதியில் உள்ள தனியார் ஸ்டீல் நிறுவனம் ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 4-ம் தேதி வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவரது உரிமையாளர் சண்முகர் செல்போனில் தொடர்பு கொண்டு, நிறுவனத்துக்குள் புகுந்து இருவர் தகராறு செய்து கொண்டு இருக்கின்றனர். என்ன விவகாரம் என விசாரித்து, அவர்களை நிறுவனத்தை விட்டு வெளியே அனுப்பி வைக்கும்படி சங்கரேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.
காலி செய்யும்படி மிரட்டல்: அதன்படி அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு நின்றிருந்த இருவர், ‘இந்த நிறுவனத்தை உடனே காலி செய்ய வேண்டும். இல்லை என்றால் நடப்பதே வேறு’ என தொழிலாளர்களை மிரட்டிக் கொண்டு இருந்தனர். அங்கு சென்ற சங்கரேஸ்வரன், ‘நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகர் வந்த பிறகு பேசிக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.
அப்போது தகராறில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் சங்கரேஸ்வரனை தகாத வார்த்தைகளால் பேசி, ‘துப்பாக்கியை காட்டி, இடத்தை அனைவரும் காலி செய்துவிட்டு செல்ல வேண்டும் இல்லையென்றால், அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டிவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
சங்கரேஸ்வரன் இது தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், துப்பாக்கியை காட்டி மிரட்டியது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் மதுசூதனன் ரெட்டி (62) என்பதும், அவருடன் வந்தது அவரது நண்பரான அதே மாநிலத்தைச் சேர்ந்த ராமையா என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த மதுசூதனன் ரெட்டியை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி,6 தோட்டாக்கள், துப்பாக்கி உரிமை ஆவணம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
விசாரணையில், சம்பந்தப்பட்ட ஸ்டீல் நிறுவனம் வாடகைக்கு செயல்பட்டு வருவதும், அந்த இடத்தின் உரிமையாளரின் உறவினரான மதுசூதனன்ரெட்டி மேற்படி இடத்துக்கு சென்று, நிறுவனத்தை காலி செய்யுமாறு தகராறு செய்து, சங்கரேஸ்வரனை துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT