Last Updated : 07 Jul, 2025 04:51 PM

 

Published : 07 Jul 2025 04:51 PM
Last Updated : 07 Jul 2025 04:51 PM

பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக மோசடி - விருதுநகரில் கடை உரிமையாளர் கைது

விருதுநகர்: மரக்கார் பிரியாணி கடை கிளை அமைத்து தருவதாக பல கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான அதன் உரிமையாளர் விருதுநகரில் இன்று கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கங்காதரன்(45). இவர் தான் நடத்தி வரும் மரக்கார் பிரியாணி கடை கிளை அமைக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என விளம்பரம் செய்துள்ளார். அதை நம்பி தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 239 பேர் தங்கள் பகுதியில் பிரியாணி கடை அமைப்பதற்காக உரிமம், கடைக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றுக்காக பணம் கொடுத்து உள்ளனர். ஒரு கடை கிளை அமைக்க ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர்.

முதலில் 21 பிரியாணி கடைகள் திறக்கப்பட்ட நிலையில், சிறிது காலத்தில் அவை மூடப்பட்டது. பிற இடங்களில் கடை திறக்கப்படாத நிலையில், செலுத்திய பணம் திரும்ப வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் கங்காதரன் மீது புகார் அளித்தனர். இந்த வழக்கு விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த அவர்களிடம் இருந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புகார்களை பெற்று பதிவு செய்து வந்தனர்.

மேலும் இது தொடர்பாக, மரக்கார் பிரியாணி கடை உரிமையாளர் ராஜபாளையத்தை சேர்ந்த கங்காதரன், அவரது கூட்டாளிகளான ராஜபாளையத்தைச் சேர்ந்த தேவதாஸ் மரியநாயகம், மதுரை சங்கர் கணேஷ், சுந்தர்ராஜ், சதீஷ்குமார், பிரவீன், சண்முகசுந்தரம் ஆகிய ஏழு பேர் மீதும் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இவர்களில் சண்முகசுந்தரம், பிரவீன், சதீஷ்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கங்காதரனை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ராஜபாளையத்தில் இன்று காலை கைது செய்தனர். விருதுநகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டு அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x