Published : 07 Jul 2025 10:41 AM
Last Updated : 07 Jul 2025 10:41 AM
சென்னை: அமெரிக்காவில் வசிக்கும் தொழில் அதிபரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4.36 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க தலைமறைவாக உள்ள வங்கி பெண் மேலாளரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
தி.நகரைச் சேர்ந்தவர் ரவி (64). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஏப்.30-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “வெளிநாட்டில் வசித்து வரும் தொழில் அதிபரான விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை பொது அதிகாரத்தின் அடிப்படையில் பராமரித்து வருகிறேன்.
இவர்கள் இருவரும் அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கிக் கிளை ஒன்றில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள ரூ.4 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரம், அவர்களது அனுமதியின்றி 6 வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில், தொடர்புடையவர்களை கைது செய்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுத் தர வேண்டும்'' எனப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது சம்பந்தப்பட்ட அண்ணா நகர் வங்கிக் கிளையின் மேலாளராக பணியிலிருந்த மஞ்சுளா என்பது தெரியவந்தது. அவர் தனது கூட்டாளிகளான அயனாவரத்தைச் சேர்ந்த நாகேஷ்வரன் (52), தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுக குமார் (63) உட்பட மேலும் சிலருடன் சேர்ந்து இந்த பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
நாகேஷ்வரன் கடந்த 26-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், ஆறுமுக குமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள மஞ்சுளா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT