Published : 04 Jul 2025 01:20 PM
Last Updated : 04 Jul 2025 01:20 PM
ஈரோடு: ஈரோட்டில் அரசுப் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 2 மாணவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்த சிவா- சத்யா தம்பதியின் மகன் ஆதித்யா (17). இவர் குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதாகக் கூறிச் சென்ற ஆதித்யா. மாலையில் பள்ளி எதிரே சாதாரண உடையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு. ஈரோடு அரசு அனுப்பி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள். ஆதித்யா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து ஆதித்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் திரண்டனர். ஆதித்யாவின் உடலில் காயங்கள் இருந்த நிலையில், இதுகுறித்து விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும், என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று காலை ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில், குவிந்த ஆதித்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த டிஎஸ்பி முத்துக்குமரனை சூழ்ந்து கொண்டு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது. 'உங்களது புகாரை எழுதிக் கொடுத்தால் அதன்படி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கிறோம்' என போலீஸார் உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சிவா அளித்த புகாரில், 'எனது மகன் ஆதித்யாவிடம் அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் (பெயர் குறிப்பிட்டுள்ளார்) கடந்த வாரம் தகராறு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த 2-ம் தேதி மாலை பள்ளிக்கு அருகில் உள்ள சந்தில் வைத்து எனது மகனை, ஏற்கெனவே மிரட்டல் விடுத்த 2 மாணவர்கள் உட்பட பல மாணவர்கள் சேர்த்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த ஆதித்யா உயிரிழந்துள்ளார். என் மகன் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆதித்யாவின் தந்தை புகாரில் குறிப்பிட்டு இருந்த 2 மாணவர்கள் உட்பட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றிய போலீஸார் அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை முடிவில் ஆதித்யா கொலை சம்பவம் தொடர்பாக அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு துணையாக இருந்த சில மாணவர்களிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதித்யாவின் உடற்கூறு பரிசோதனை நேற்று மாலை நிறைவடைந்த நிலையில். அவரது உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.
ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில், குவிந்த ஆதித்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த டிஎஸ்பி முத்துக்குமரனை சூழ்ந்து கொண்டு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT