Published : 01 Jul 2025 06:18 PM
Last Updated : 01 Jul 2025 06:18 PM
திருப்பூர்: அரசியல் அழுத்தங்கள் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டனை சேர்ந்தவர் கவின்குமார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). திருமணமான 3 மாதங்களில் ரிதன்யா விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் எனக் கூறி தந்தைக்கு வாட்ஸ்அப் ஆடியோ பதிவு அனுப்பியிருந்தார்.
இதையடுத்து, ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியைக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ரிதன்யா குடும்பத்தினர் கூறும்போது, “திருமணமான 20 நாட்களில் நள்ளிரவில் பிரச்சினை ஏற்பட்டு ரிதன்யா வீட்டுக்கு வந்தார். அப்போதே அவர் நிம்மதியைத் தொலைத்துவிட்டார். ரிதன்யா உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் வரை, போலீஸார் விசாரணை முறையாக நடந்தது. பின்னர், உடல்நிலையைக் காரணம்காட்டி சித்ராதேவியை விடுவித்துள்ளனர். இதை ஏற்க முடியாது.
ஏனெனில், குடும்பத்தில் நடந்த விஷயங்கள் அனைத்துக்கும் மூலகாரணமாக இருந்தவர்களுள் ஒருவர் மாமியார் சித்ராதேவி. ரிதன்யா சடலத்தைப் பெறும் வரை 3 பேர் கைது என்று சொல்லிவந்த போலீஸார், சடலத்தைப் பெற்றதும் 2 பேரை மட்டும் கைது செய்துவிட்டு, சித்ராதேவியை விடுவித்துள்ளனர். அவரையும் கைது செய்ய வேண்டும்.
அரசியல் அழுத்தங்களால் இந்த வழக்கை கிடப்பில் போடுவதற்கான முகாந்திரங்கள் உள்ளன. ரிதன்யா உயிரிழப்பில் உரிய நீதியை பெற்றுத்தர வேண்டும். போலீஸார் விசாரணை, கோட்டாட்சியர் விசாரணையில் நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் எங்களுக்கு இருப்பதால், தமிழக முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு, உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் அல்லது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கூறும்போது, “பாரம்பரியக் குடும்பம் என நம்பி பெண்ணைக் கொடுத்து ஏமாந்துவிட்டோம். திருமணமான 15 நாளில் ரிதன்யா எங்கள் வீட்டுக்கு வந்து கண்ணீர் விட்டு அழுதார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவரை மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளனர். திருமணத்தின்போது கணக்கின்றி நகை போட்டும், இன்னும் நகை கேட்டு துன்புறுத்தி உள்ளனர். வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர். என் மகளுக்கு நிகழ்ந்ததுபோல இனி யாருக்கும் நடக்கக் கூடாது. ரிதன்யா இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.
இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும் திருப்பூர் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் கூறும்போது, “இளம்பெண் ரிதன்யா மரணம் தொடர்பாக பெண் வீட்டார் தரப்பிலும், போலீஸார் தரப்பிலும் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் விசாரிக்கப்படும். விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT