Published : 30 Jun 2025 02:35 PM
Last Updated : 30 Jun 2025 02:35 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளியது குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் கால்நடைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பிள்ளையார்குளம் வருவாய் கிராமம் வேப்பங்குளம் கிராமத்தில் சித்திரக்குளம் கண்மாய் அருகே உள்ள மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் அனுமதி இன்றி செம்மண், சரளை மண் அள்ளப்பட்டு செங்கல் சூளைகள், கட்டுமானப் பணிகளுக்கு கடத்தப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த மே 11-ம் தேதி மண் அள்ளப்படுவது குறித்து விவசாயி அம்மையப்பன் 'வணக்கம் விருதுநகர்' புகார் எண் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளரிடம் புகார் அளித்தார். மேலும் மே 23-ம் தேதி நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்தப் புகார் மனு குறித்து வட்டாட்சியர் பாலமுருகன், புகார் அளித்த விவசாயி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரை ஒன்றாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். இது குறித்து சார் ஆட்சியரிடம் தெரிவித்ததை அடுத்து விசாரணைக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விவசாயி அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்யாமல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் விளக்கத்தை ஏற்று, மண் அள்ளப்படவில்லை எனக்கூறி புகார் மனுவை வட்டாட்சியர் முடித்து வைத்துள்ளது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ள நிலையில், மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுவதால் பால் உற்பத்தி மேலும் சரிவடையும் அபாயம் நிலவுவதாக கால்நடை வளர்ப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயி அம்மையப்பன் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டாரப் பகுதி கிராம மக்கள் மேய்ச்சல் தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால், மேய்ச்சலுக்கு புறம்போக்கு நிலங்களை நம்பியே விவசாயிகள் கால் நடைகளை வளர்க்கின்றனர். மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் அதிகாரிகள் துணையுடன் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதால் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.
இது குறித்து புகார் அளித்த போது, வட்டாட்சியர் மண் அள்ளியவரையே அழைத்து விசாரித்து, அவரின் விளக்கத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மண் அள்ளவில்லை என பதிலளித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக வந்த புகாரின் போதும், வட்டாட்சியர் பாலமுருகன் இதே பாணியிலேயே மண் அள்ளவில்லை எனக் கூறி புகார் மனுவை முடித்து வைத்தார்.
ஆனால், வனத்துறை புகாரை அடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பல நூறு ஏக்கரில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டது உறுதியானது. மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளியது குறித்து சிறப்புக் குழுவை அமைத்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT