Published : 30 Jun 2025 05:58 AM
Last Updated : 30 Jun 2025 05:58 AM
திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவாகி உள்ள புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பிற மாநிலங்களில் பதுங்கியிருக்கிறாரா? என, சிபிசிஐடி தனிப்படையினர், சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன், தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் 17 வயது தம்பியை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி, போலீஸ் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, ஏடிஜிபியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
பூவை ஜெகன் மூர்த்திக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம், கைது உத்தரவை ரத்து செய்தும், பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை வேறு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பூவை ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை கடந்த 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டது. இதனால், சிபிசிஐடி போலீஸார் தன்னை கைது செய்வார்கள் என்பதால், பூவை ஜெகன்மூர்த்தி, பூந்தமல்லி அருகே உள்ள ஆண்டர்சன்பேட்டையில் உள்ள தன் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, சிபிசிஐடி காஞ்சிபுரம் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான 4 தனிப் படையினர் பூவை ஜெகன் மூர்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவர்களின் இந்த தேடுதல் பணியில், பூவை ஜெகன் மூர்த்தியின் வீடு பூட்டப்பட்டுள்ளதும், அவரது குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுநர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், நெருங்கிய நண்பர்களின் மொபைல் போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
ஆகவே, சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோரின் மொபைல் போன் தரவுகளை ஆய்வு செய்து சிபிசிஐடி போலீஸார் பூவை ஜெகன்மூர்த்தி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பிறமாநிலங்களில் பதுங்கியிருக்கிறாரா? என்ற கோணத்தில் விசாரித்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், பூவை ஜெகன்மூர்த்தி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுமீதான விசாரணையில், பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் அளிக்க சிபிசிஐடி போலீஸார் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கூறப்படுகிறது. எனவே, பூவை ஜெகன்மூர்த்திக்கு, உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT