Published : 29 Jun 2025 10:23 AM
Last Updated : 29 Jun 2025 10:23 AM
போலி காப்பீடு நிறுவனத்தை நடத்தி முதியவரிடம் ரூ.18.64 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராமநாதன் (65). இவர் மேற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 20-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘எனக்கு கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி முதல் குறிப்பிட்ட சில செல்போன் எண்களில் இருந்து அழைப்பு வந்தது. அவர்கள் நான் ஒரு தனியார் காப்பீடு நிறுவனத்தில் வைத்துள்ள பாலிசி விவரங்களை சரியாக கூறினர். பின்னர், அதனை சரண்டர் செய்து பணம் தருவதாக கூறினர்.
மேலும், சில காப்பீடு நிறுவனங்களின் பெயர்களை கூறி, அந்த நிறுவனங்கள் புதிய சலுகைகள் கொடுத்துள்ளதாகவும், அதில் பாலிசி எடுத்தால் குறைந்த நாட்களில் அதிக பணத்துடன் பாலிசியை சரண்டர் செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் ஆசைவார்த்தை கூறினர். இதையடுத்து, நான் ரூ.18,64,209 பணத்தை செலுத்தி 17 பாலிசிகளை எடுத்தேன்.
ஆனால், இதுவரை எனக்கு பாலிசி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்களை தொடர்பு கொண்டு பேசிய போது, எனது பெயரில் எந்த பாலிசியும் எடுக்கப்பட வில்லை என தெரிவித்தனர். எனவே, என்னை ஏமாற்றி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சென்னை அண்ணாசாலை, டிஎம்எஸ் சிக்னல் அருகே, முனிர் உசேன், அசோகன் ஆகிய 2 பேர், போலி காப்பீடு நிறுவனத்தை நடத்தி பொதுமக்களின் காப்பீடு பணத்தை மோசடி செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 27 செல்போன்கள், 19 லேண்ட் லைன் போன், 1 லேப் டாப், 1 கணினி, பிரிண்டர், பணியாளர்கள் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT