Published : 29 Jun 2025 01:04 AM
Last Updated : 29 Jun 2025 01:04 AM
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு பாடிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது, ஒருவர் சிறிய குரங்கை தனது உடைமையில் மறைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். தகவலின்பேரில் வனத் துறை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அந்தக் குரங்கு, அமேசான் காடுகளில் காணப்படும் அரியவகை அணி குரங்கு வகையைச் சேர்ந்தது என கூறினர்.
இதையடுத்து, குரங்கைக் கடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் டி.புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணனை(45), வனத் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து வனத் துறையினர் கூறியது: அதிகபட்சம் ஒன்றரை கிலோ எடை, ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரம் வரை வளரும் இவ்வகை குரங்குகள், செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. ஆனால், இந்திய வன உயிரியல் சட்டத்தின்படி, மற்ற நாடுகளின் உயிரினங்களை இந்தியா கொண்டு வருவது குற்றம். ஏனெனில், இந்திய சுற்றுச்சூழலுக்கு தொடர்பில்லாத உயிரினங்கள், இந்தியாவின் அடிப்படை தகவமைப்பை மாற்றக்கூடியவை. எனவே, அந்தக் குரங்கை மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT