Published : 25 Jun 2025 02:19 PM
Last Updated : 25 Jun 2025 02:19 PM

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: பதவி பறிபோனதால் நிகழ்ந்ததாக போலீஸ் தகவல்

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் பாலமுருகன் கொலை செய்யப்ட்டதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் இன்று (ஜூன் 250 அதிகாலை நேரத்தில் ஓட, ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார். பதவி பறிபோன முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் இக்கொலையை செய்திருப்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூர் குமாரனந்தபுரம் காமராஜர் வீதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (30). பனியன் தொழில் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலமுருகனுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 25) அதிகாலை வரை அப்பகுதியில் பாலமுருகன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து வீட்டுக்கு சென்ற நிலையில் மீண்டும் நண்பர்கள் பாலமுருகனை அலைபேசியில் தொடர்புகொள்ளவே, அவர் மீண்டும் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது நண்பர்கள் 3 பேருடன் பேசிக்கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் 3 பேர் அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டினர். அங்கிருந்து தப்பிக்க முயன்று ஓட முயற்சித்தபோது, விரட்டி விரட்டி கொலை செய்யப்பட்டார். இதில் உடலின் பல்வேறு பாகங்கள் துண்டு, துண்டாக சிதறிக் கிடந்தன. தலை பகுதியில் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அப்பகுதியில் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் அங்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் பிரவின்கவுதம் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநகரின் பல்வேறு இடங்களில் விசாரிக்கப்பட்டது. கொலையின் போது உடனிருந்த நண்பர்கள் 3 பேரிடம் போலீஸார் முதல்கட்டமாக விசாரித்து, தனிப்படை அமைத்து விசாரிக்க துவங்கினர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “இந்து முன்னணியில் ஏற்கனவே பொறுப்பில் இருந்த நீக்கப்பட்ட குமாரனந்தபுரத்தை சேர்ந்த சுமன் (34) மற்றும் தற்போதைய பொறுப்பாளர் பாலமுருகனுக்கு இடையே பொறுப்புவகிப்பது தொடர்பாக முன்பகை எழுந்தது. இதில் ஆத்திரத்தில் இருந்த சுமன், பாலமுருகனை கொலை செய்ய திட்டமிட்டிருப்பது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் சுமனை கேரள மாநிலம் பாலக்காட்டில் வைத்து பிடித்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் இதில் சம்பந்தப்பட்ட நரசிம்ம பிரவின் (29) என்பவரை தேடி வருகிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் கூறும்போது, “இந்து முன்னணி அமைப்பில் சுமன் இருந்தார். தற்போது இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்ட துணைத் தலைவராக இருந்து வருகிறார். ஏற்கெனவே திருப்பூர் கோல்டன் நகர் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் போலீஸார் தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். இதில் சுமன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சொல்கின்றனர். ஆனால் உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x