Published : 23 Jun 2025 12:04 PM
Last Updated : 23 Jun 2025 12:04 PM
உடுமலை: உடுமலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றுக்கு மது போதையில் சென்ற திமுகவினர் அங்கு பணிபுரிந்த ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிபாளையத்தில் ரபீக் என்பவர் அசைவ உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் கடந்த 15 ஆம் தேதி இரவு 10 மணியளவில் உடுமலை நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் உணவருந்த சென்றுள்ளனர். அப்போது முட்டை ஆப்பாயில் கேட்டுள்ளனர். உணவகத்தில் வேலை செய்யும் முருகன் என்ற சப்ளையர் ஆப்பாயிலை கொடுத்துள்ளார்.
அப்போது ‘ஏன் பெப்பர் போடவில்லை?’ என கேட்டுள்ளனர். ‘பெப்பர் பாட்டில் உணவருந்தும் டேபிளில் தான் உள்ளது, தேவையான அளவு நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்’ என்று சப்ளையர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர், ‘ஏன் பெப்பர் போட்டு தர மாட்டாயா?’ என்று தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மேற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகிகள் உணவக ஊழியரை சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த உணவகத்தில் பொருத்திருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ நேற்று (ஜூன் 22) சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீஸார் சம்பவம் நடந்த உணவகத்துக்குச் சென்று விசாரித்தனர்.
அப்போது நடைபெற்ற சம்பவங்கள் உண்மை என்ற விவரமும் தெரியவந்தது. உணவக உரிமையாளர் ரபீக் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் குமார் மற்றும் உடன் சென்ற ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT