Published : 22 Jun 2025 01:47 AM
Last Updated : 22 Jun 2025 01:47 AM
தந்தை, மகன் கொலை வழக்கில், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மகனுக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்துக்கு உட்பட்ட வடக்கு இருங்களூரைச் சேர்ந்தவர் ரோக்ராஜ் (68). இவர், நிலப் பிரச்சினை காரணமாக தனது அண்ணன் ஆரோக்கியசாமியை 2005-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்த ரோக்ராஜ் 2018-ல் விடுதலையானார்.
இந்நிலையில், ரோக்ராஜுக்கும், கொலை செய்யப்பட்ட அவரது அண்ணன் ஆரோக்கியசாமியின் மகனான முன்னாள் ராணுவ வீரர் ஜேசுராஜ் குடும்பத்துக்கும் இடையே வடக்கு இருங்களூரில் வயலுக்குச் செல்லும் பொதுப் பாதையில் நடந்து செல்வது தொடர்பாக 2020-ல் தகராறு ஏற்பட்டது. ஏற்கெனவே தனது தந்தையை கொலை செய்த கோபத்தில் இருந்த ஜேசுராஜ், தனது மகன் பிரின்ஸ் ஃபெர்னான்டஸ்(22) உள்ளிட்டோருடன் சேர்ந்து, ரோக்ராஜ் மற்றும் அவரது மகன் ஜான்டேவிட்(33) ஆகியோரை வெட்டிக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக சமயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜேசுராஜ், பிரின்ஸ் ஃபெர்னான்டஸ், இவரது மனைவி ஞானசவுந்தரி ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கோபிநாதன், குற்றம்சாட்டப்பட்ட ஜேசுராஜ், பிரின்ஸ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,000 அபராதம் விதித்தும், ஞானசவுந்தரியை விடுதலை செய்தும் நேற்று உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆஜரானார். வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், அன்பழகன், தற்போதைய காவல் ஆய்வாளர் ராம்குமார், நீதிமன்ற காவலர் விக்னேஷ் ஆகியோரை எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT