Published : 21 Jun 2025 11:29 AM
Last Updated : 21 Jun 2025 11:29 AM
புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலியில் சந்தேகத்திற்கிடமாக 9 பெண்கள் ஜீன்ஸ், டிஷர்ட்டுகள் அணிந்து ரூ.100, 200 உதவி கேட்டனர். இவர்களைப் புகாரின் பேரில் கைது செய்த போலீஸார் யாசகம் கேட்டதாக வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
நேற்று பரேலியின் அயோன்லா - பதான்யு சாலையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அருகே ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகள் அணிந்தபடி சந்தேகத்துக்கு இடமான வகையில் 9 பெண்கள் சுற்றித் திரிந்தனர். இவர்கள், தம் முன்னே வழியில் தென்படுவோரிடம் எல்லாம் ரூ.100, 200 தரும்படி உதவி கேட்டுள்ளனர்.
இதற்காக, வீட்டில் பல பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி, பண உதவி கேட்டு கெஞ்சியுள்ளனர். இதில் சிலர் அப்பெண்கள் கூறியதை நம்பி அவர்களுக்குப் பணமும் கொடுத்தனர். இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பொதுமக்கள், பரேலி போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதைப் புகாராக ஏற்ற பரேலி போலீஸார் அந்த 9 பெண்களையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அனைவரும் குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், அப்பெண்கள் ஊர்மி (28), நீது (25), குசும் (25), அஞ்சலி (21), சுனிதா (26), ரீனா (20), மனிஷா (20), பூனம் (25) மற்றும் டினா (26) என தம் பெயர்களையும் கூறியுள்ளனர். போலீஸார் அவர்கள் அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
தங்கள் வறுமையின் காரணமாக அவர்கள் ஒன்றிணைந்து இதுபோல் வெளிமாநில நகரங்களில் பண உதவி கேட்டதாக போலீஸாரின் விசாரணையில் கூறியுள்ளனர். இதனால், அவர்கள் அனைவர் மீதும் யாசகம் கேட்டதாக பரேலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு அவர்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, இப்பெண்களுடன் மேலும் சிலரும் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் மற்ற இடங்களில் இப்பெண்களைப் போல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT