Published : 20 Jun 2025 02:59 PM
Last Updated : 20 Jun 2025 02:59 PM
இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்ற போது இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி உள்ள ராஜா ரகுவன்சியின் மனைவி சோனம், சஞ்சய் வர்மா என்பவருக்கு தொடர்ச்சியாக போன் செய்துள்ளார். இந்நிலையில், அந்த சஞ்சய் வர்மா யார் என்பதை போலீஸார் இப்போது கண்டறிந்துள்ளனர்.
மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையிலான 39 நாட்களில் மட்டும் சுமார் 234 முறை தொலைபேசி அழைப்பு மூலம் சோனம் மற்றும் சஞ்சய் பேசியுள்ளனர். இந்த ஒவ்வொரு அழைப்பும் சுமார் 30 முதல் 60 நிமிடங்கள் வரை இருந்துள்ளது. இது போலீஸ் விசாரணையில் தெரிய வர யார் அந்த சஞ்சய் வர்மா என்ற விசாரணையில் இறங்கினர்.
கடைசியாக சஞ்சய் வாட்ஸ்அப் கணக்கு ஜூன் 8-ம் தேதி வரையில் ஆக்டிவாக இருந்துள்ளது. அன்றைய தினம் ராஜா ரகுவன்சி கொலையில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அதே நாளில் சோனம் சரண் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சஞ்சய் வர்மா என்பவரின் பெயர் இந்த வழக்கில் அடிபட்டது. இது தொடர்பாக சோனத்தின் சகோதரரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சஞ்சய் வர்மா என்பவர் தங்களது குடும்பத்தினர் யாருக்கும் தெரியாது என திட்டவட்டமாக அவர் சொல்லி உள்ளார்.
“சஞ்சய் வர்மா என்ற பெயரில் தான் ராஜ் குஷ்வாகா பயன்படுத்தி வந்த மொபைல் எண்ணை சோனம் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் யாருக்கும் தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இதை செய்துள்ளார். ட்ரூ காலரில் சஞ்சய் வர்மா என அது குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்த சிம் கார்டு ராஜ் குஷ்வாகா பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு வேறு நோக்கம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்” என ஈஸ்ட் காசி ஹில்ஸ் காவல் கண்காணிப்பாளர் விவேக் சையம் தெரிவித்துள்ளார்.
மேகாலயாவில் நடந்து என்ன? - மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை.
கடந்த ஜூன் 2-ம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மீட்கப்பட்டது. மேகாலயா போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி சோனம், காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் காவல் துறையினர் கூறிய புதிய தகவல்கள் வெளியானது. அதன் விவரம்: மேகாலயா சம்பவத்துக்கு முன்பே சோனம் 3 முறை ராஜா ரகுவன்சியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. முதலில் குவாஹாட்டியில் வைத்து ராஜா ரகுவன்சியை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது.
அடுத்ததாக மேகாலயாவின் சோஹ்ராவில் வைத்து இரண்டு முறை கணவரை கொலை செய்ய சோனம் முயற்சித்துள்ளார். அதுவும் நிறைவேறவில்லை. இறுதியாக 4-வது முயற்சியில் வெய்சாடோங் அருவியில் வைத்து தனது கணவரை கொல்லும் திட்டத்தை சோனம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT