Published : 20 Jun 2025 06:33 AM
Last Updated : 20 Jun 2025 06:33 AM

தலைமை செயலகத்தில் அரசு வேலை பெற்று தருவதாக ஆசை காட்டி ரூ.17.50 லட்சம் மோசடி: மாநகராட்சி ஊழியர் கைது

முத்​து​ராமன்

சென்னை: தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் வகையில் அரசு வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் பெற்று மோசடி செய்தததாக சென்னை மாநகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பாரிமுனை, அப்பாராவ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (49). இவருக்கு சென்னை மாநகராட்சி, 4வது மண்டலத்தில் உதவியாளராக பணி செய்து வரும் ஓட்டேரியைச் சேர்ந்த முத்துராமன் (55) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அப்போது, எனக்கு அரசு உயர் அதிகாரிகள் பலரை தெரியும். நான் நினைத்தால் அரசு வேலை பெற்றுக் கொடுக்க முடியும் என முத்துராமன் தெரிவித்துள்ளார்.

இதை உண்மை என நம்பிய ஜெய்சங்கர், தனது உறவினக்கள் இருவருக்கு தலைமைச் செயலகத்தில் கம்யூட்டர் ஆபரேட்டர் வேலை வாங்கி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். உடனே ஏற்பாடுசெய்வதாக கூறி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கமிஷனாக ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டுள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட முத்துராமன் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவை ஜெய்சங்கரிடம் கொடுத்துள்ளார். அந்த உத்தரவுடன் பணியில் சேர தலைமைச் செயலகம் சென்றபோதுதான் அது போலி பணிநியமன ஆணை என தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஜெய்சங்கர் இது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், குன்றத்தூரில் தலைமறைவாக இருந்த முத்துராமன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மனைவி உஷாராணியை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x