Published : 20 Jun 2025 05:57 AM
Last Updated : 20 Jun 2025 05:57 AM
திருச்சி: அரசுப் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் முசிறி பெண் கோட்டாட்சியர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் முசிறி கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவர் ஆரமுத தேவசேனா(55). இவர், திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக ஜீப்பில் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். துறையூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பிரபாகரன்(51) ஜீப்பை ஓட்டி வந்தார்.
திருச்சி ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி பகுதியில் ஜீப் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்துக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் பிரபாகரன் காரை லேசாக திருப்பியுள்ளார். அப்போது, ஜீப் கட்டுப்பாட்டை இழந்து, அரசு பேருந்தின் மீதும், அங்கு சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொக்லைன் மீதும் மோதியது. இதில், ஜீப்பில் இருந்த கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா படுகாயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பிரபாகரன் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் தேவசேனா உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த பிரபாகரனை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநர் கரூர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ரங்கராஜ்(38) என்பவரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ஆரமுத தேவசேனாவுக்கு, புதுக்கோட்டையில் அரசு அலுவலராக பணியாற்றி வரும் கணவர் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
முதல்வர் இரங்கல்: தேவசேனா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1 கோடி மற்றும் முதல்வர் பொது நிவாரண நிதி மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT