Published : 19 Jun 2025 06:03 AM
Last Updated : 19 Jun 2025 06:03 AM

ஐ.எஸ். அமைப்புக்கு ஆள்சேர்த்த விவகாரத்தில் கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்பட 2 பேர் கைது

அகமது அலி, ஜவஹர் சாதிக்

கோவை: ஐ.எஸ். அமைப்புக்கு ஆள்சேர்த்த விவகாரத்தில் கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட இருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கோவை உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, 2022-ம் ஆண்டு அக். 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது.

இதில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சோதனை நடத்தினர். அப்போது குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் அரபிக் கல்லூரியிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் போது, அக்கல்லூரியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவு தொடர்பான ஆவணங்கள், அந்த அமைப்புக்கு ஆட்களை மூளைச்சலவை செய்து அனுப்புவது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில், கடந்தாண்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று மீண்டும் கோவை வந்தனர். போத்தனூர் திருமறை நகர் பகுதியைச் சேர்ந்த அகமது அலி, உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த ஜவஹர் சாதிக் ஆகியோரை பிடித்து, காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக மூளைச் சலவை செய்தது தொடர்பாக விசாரித்தனர்.

அகமது அலி, அரபிக் கல்லூரியின் முதல்வராகவும், ஜவஹர் சாதிக், அரபிக் கல்லூரியில் ஊழியராகவும் பணியாற்றி வருகின்றனர். சில மணி நேர விசாரணைக்கு பின்னர், இருவரை யும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x