Published : 18 Jun 2025 08:17 PM
Last Updated : 18 Jun 2025 08:17 PM
கோத்தகரி: முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி அ.ராமு உட்பட 8 பேர் மீது கோத்தகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி அருகே கொணவக்கொரை பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவரது மகன் திலக். இவர், கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘முன்னாள் எம்எல்ஏ சாந்தி அ.ராமு, அவருடைய சகோதரர் ராஜன், ராஜ்குமார், ராஜூ, லிங்கம்மாள், துரை என்பவரின் வாரிசுகளான தீபு, திலீப், ரஞ்சித் ஆகியோர் ஊட்டி முத்திரைத்தாள் விற்பனையாளர் கோஷி என்பவரிடம் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 8 மற்றும் 12-ம் தேதிகளில் ரூ.50 மதிப்புள்ள முத்திரைத்தாள்களை வாங்கியுள்ளனர்.
அதில் தேதியை திருத்தம் செய்து, அதே முத்திரைத்தாளில் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளனர். அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. எஸ்டேட் டீ ஃபேக்டரி என்ற பெயரில் தயாரிக்கப் பட்ட ஆவணத்தில் உள்ள முத்திரைத்தாள்களில் தேதிகள் மாற்றி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி அ.ராமு உட்பட 8 பேர் மீது கோத்தகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்திரைத்தாளில் தேதியை மாற்றி மோசடி செய்த முன்னாள் எம்எல்ஏ சாந்தி அ.ராமுவை கைது செய்ய வேண்டும் என அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு மாவட்ட செயலாளர் எம்.பாரதியார் வலியுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT