Published : 18 Jun 2025 06:00 PM
Last Updated : 18 Jun 2025 06:00 PM
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மர்ம நபர்கள் ரயில் பாதையின் குறுக்கே வைத்த தண்டவாளத் துண்டு நேற்று (ஜூன் 17) இரவு ஏற்காடு விரைவு ரயில் இன்ஜினில் சிக்கியது. எனினும் ரயிலை லோகோ பைலட் உடனடியாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் பாதையின் குறுக்கே தண்டவாள துண்டினை வைத்த மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து, ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயில் சேலம் மாவட்டம் சங்ககிரி ரயில் நிலையத்தில் நின்றுவிட்டு, சேலத்தை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில், மகுடஞ்சாவடி அருகே தாழையூர் என்ற இடத்துக்கு வந்தபோது, ரயில் இன்ஜினில் ஏதோ சிக்கி பெரிய சப்தம் எழுந்தது. இதைத் தொடர்ந்து, லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி பார்த்தபோது, ரயில் இன்ஜின் சக்கரங்களுக்கு குறுக்கே சுமார் 10 அடி நீள இரும்பு தண்டவாளத் துண்டு சிக்கியிருந்தது தெரியவந்தது.
உடனடியாக, ரயில்வே அதிகாரிகள் சேலம் இருப்புப் பாதை போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் பாதையின் அருகே மாற்றுப் பணிகளுக்காக போடப்பட்டிருந்த 2 தண்டவாள துண்டுகளில் ஒன்றை மர்ம நபர்கள் எடுத்து ரயில் பாதையின் குறுக்கே வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, சம்பவ இடத்தில், சேலம் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி. பாபு, இன்ஸ்பெக்டர் சிவசெந்தில், ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் பிரியா, சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் சவுரவ் குமார், ரயில்வே பாதுகாப்பு படையினர், சேலம் கோட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
ரயிலில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் உள்பட பயணிகள் ஏராளமானோர் இருந்த நிலையில், நடுவழியில் ரயில் நின்றது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, ரயிலில் சிக்கியிருந்த இரும்புத் துண்டு அகற்றப்பட்டு, மகுடஞ்சாவடி ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தடைந்தது. பின்னர் சேலத்தில் இருந்து மாற்று ரயில் இன்ஜின் கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்ட பின்னர், ஏற்காடு விரைவு ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.
கேரளா - சென்னை இடையிலான முக்கிய ரயில் பாதை என்பதால், இந்த வழியாக செல்ல வேண்டிய மேலும் சில ரயில்களும் ஆங்காங்கே ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு, தாமதமாக சென்றதால், பயணிகள் அவதிப்பட்டனர். இதனிடையே, ரயில் பாதையின் குறுக்கே தண்டவாளத் துண்டு வைக்கப்பட்ட தாழையூரில் இன்று (ஜூன் 18) ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டனர். ரயில்வே பாதுகாப்புப் படை மோப்பநாய் ‘புரூக்ஸ்’ உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.
ரயில் பாதையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தண்டவாளத் துண்டில் பதிவாகியிருந்த கைரேகைகள், தாழையூரில் ரயில்வே பாதை அருகே உள்ள வீடுகள், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள், கைப்பற்றிய தண்டவாளத்தில் உள்ள கைரேகள் ஆகியவற்றைக் கொண்டு ரயில்வே போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சம்பவ இடம், ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லையில் இருப்பதால், ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT