Published : 18 Jun 2025 06:29 AM
Last Updated : 18 Jun 2025 06:29 AM
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த தராசு கிராமத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா (80). இவர், நேற்று முன்தினம் மாலையில் புலவனூர் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மூதாட்டியை சவுக்குத் தோப்புக்குள் இழுத்துச் சென்று, அவரை பாலியல் வன்கொடுமை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.
சவுக்குத் தோப்பில் மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியை அப்பகுதியினர் மீட்டு, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கடலூர் மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில், ஆய்வாளர் வேலுமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் மேல்மாம்பட்டில் ஒரு முந்திரி தோப்பில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது.
இதையடுத்து, நேற்றுகாலை அங்கு சென்ற போலீஸார், பண்ருட்டி எஸ்.கே. பாளையத்தைச் சேர்ந்த சுந்தரவேல் (25) என்பவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், வீச்சரிவாளால் காவலர் குபேந்திரனின் வலது கையில் வெட்டிவிட்டு, மற்றொரு காவலர் ஹரிஹரனை வெட்ட முயற்சித்தார். உடனே, ஆய்வாளர் வேலுமணி, துப்பாக்கியால் சுந்தர வேலுவை சுட்டுப் பிடித்தார். காயமடைந்த காவலர் குபேந்திரன் பண்ருட்டி அரசு மருத்து வமனையிலும், சுந்தரவேல் முண்டியாம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கூறும்போது, “மூதாட்டியை வன்புணர்வு செய்து, அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றதை சுந்தரவேல் ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன” என்றார்.இதற்கிடையே, மூதாட்டி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT