Published : 18 Jun 2025 05:32 AM
Last Updated : 18 Jun 2025 05:32 AM

சகோதரியை ஏமாற்றி ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் கைது

ராஜா

சென்னை: நிறுவனங்களில் முதலீடு செய்தால் பங்கு தருவதாகக் கூறி சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐயப்பன்தாங்கலில் வசித்து வருபவர் பொன்னரசி(38). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது: எனது அண்ணன் தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த ராஜா(35). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் 59-வது வார்டு அதிமுக கவுன்சிலராகவும், மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார்.

எனது அண்ணன் மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகியோர் மருந்து விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதில், முதலீடு செய்தால் 16 சதவீத பங்குகள் தருவதாக ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். இதையடுத்து நிறுவனத்தை விரிவாக்கம் செய்தால் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, எனது கணவருக்கு சொந்தமான ஶ்ரீபெரும்புதூர், நந்தம்பாக்கத்தில் உள்ள 2 ஏக்கர் சொத்தின் பத்திரங்களைக் கொடுத்தேன். அதை அடமானமாக வைத்து ரூ.11 கோடி வங்கி கடன் பெற்றனர். அந்த பணத்தை எனக்கு தெரியாமல் ராஜாவின் மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றிக் கொண்டனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரி தொழில் தொடங்க இருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக பங்குகள் தருவதாகவும் என் அண்ணன் ஆசை வார்த்தை கூறினார். இதற்கு முதலீடாக என்னிடமிருந்த 300 பவுன் தங்க நகைகளைக் கொடுத்தேன். அந்த நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று அந்த பணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஏக்கர் இடத்தை அவரது பெயரில் வாங்கி கொண்டார்.

எனக்கு நிறுவன லாபத்தில் பங்கு கொடுக்கக் கூடாது என்பதற்காக ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகியோர் கூட்டு சேர்த்து போலியாக என் கையெழுத்தைப் போட்டு நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக ராஜா பெயருக்கு மாற்றி கொண்டனர்.

மேலும், நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்ததாக போலி கடிதம் தயாரித்து, அதனை ஆன்லைனில் பதிவேற்றி, என்னை நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்தும் நீக்கி விட்டு, அனுஷாவை புதிய இயக்குநராக நியமித்து விட்டனர். என்னிடம் மொத்தம் ரூ.17 கோடி வரை ஏமாற்றியுள்ளனர். எனவே, மோசடி செய்த அண்ணன் ராஜா, அவரது மனைவி அனுஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, உதவி ஆணையர் காயத்ரி மேற்பார்வையில், ஆய்வாளர் கமல் மோகன், உதவி ஆய்வாளர் பிரியங்கா தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், பொன்னரசி தெரிவித்த புகார் உண்மை என தெரியவந்தது.

இதற்கிடையே, புகாருக்குள்ளான ராஜா தப்பித்து எந்த நேரத்திலும் வெளிநாடு செல்லலாம் என போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற ராஜாவை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x