Published : 17 Jun 2025 04:15 PM
Last Updated : 17 Jun 2025 04:15 PM
திருநெல்வேலி மாவட்டம் பழவூரில் 8 மாதங்களுக்குமுன் காணாமல்போன பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அவரது எலும்புக் கூடு மற்றும் உடைகள் சேரன்மகாதேவி அருகே கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழவூர் அருகே மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கதுரை மகள் கயல்விழி (28). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி கோயிலுக்கு சென்று வருவதாக சென்றவர் அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இது தொடர்பாக, பழவூர் காவல் நிலையத்தில் சிவலிங்கதுரை புகார் செய்தார். அதன்பேரில் இளம்பெண் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீஸார் தேடிவந்த நிலையில், காணாமல்போன பெண்ணின் நட்பு வட்டாரங்கள் மற்றும் அவரது தொலைபேசி தகவல் தொடர்பான மின்னணு சாட்சிய விவரங்களை போலீஸார் சேகரித்து ஆய்வு செய்துவந்தனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த சாமியார் சிவசாமி என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்ததில், கயல்விழி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கயல்விழி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மாந்திரீக முறையில் பரிகாரங்கள் செய்து, கயல்விழியை, அவரது கணவருடன் சேர்த்து வைப்பதாக, அவரது பெற்றோரிடம் கூறிய சாமியார் சிவசாமி, இதற்காக அவ்வப்போது பணமும், கயல்விழியின் நகைகளையும் பெற்று வந்துள்ளார். ஆனால், மாந்திரீக செயலில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. பணம், நகைகளைக் கேட்டு மந்திரவாதி சிவசாமியை கயல்விழி தொந்தரவு செய்துள்ளார்.
இதனால், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்துக்கு வருமாறு கயல்விழியை, மந்திரவாதி சிவசாமி அழைத்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அங்கு சென்ற கயல்விழியை, தூத்துக்குடி மாயாண்டி ராஜா, கொட்டாரம் சிவனேஸ்வரி மற்றும் வீரவநல்லூர் கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து சிவசாமி காரில் கடத்திச் சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு, கயல்விழியின் உடலை சேரன்மகாதேவி அருகே கங்கணாங்குளம் ஊருக்கு வெளியேயுள்ள உள்ள 80 அடி ஆழமுள்ள மணிமுத்தான்குளம் கால்வாயில் யாருக்கும் தெரியாமல் வீசியுள்ளனர்.
இதையடுத்து, மணிமுத்தான்குளம் கால்வாயில் தீயணைப்பு துறை உதவியுடன் கயல்விழியின் உடலை தேடும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது கால்வாயில் இருந்து கயல்விழியின் உடைகள் மற்றும் எலும்புக்கூடு பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, சிவசாமி, மாயாண்டி ராஜா, சிவனேஸ்வரி, கண்ணன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் நகை, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT