Published : 16 Jun 2025 05:48 PM
Last Updated : 16 Jun 2025 05:48 PM
சென்னை: போலீஸ் என கூறி செல்போன் கடை உரிமையாளரை தாக்கி வழிப்பறி ஈடுபட்டவர்களில் 3 பேரை பொது மக்கள்விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (63). வடக்கு கடற்கரை, ஈவ்னிங் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 14-ம் தேதி இரவு, கடையில் வியாபாரம் செய்த பணத்தை பையில் எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் பாரிமுனை சந்திப்பு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த சிலர், தங்களை காவல் துறை சிறப்புப் படையினர் என கூறி அறிமுகம் செய்து கொண்டு, ’‘உங்கள் உடமைகளை சோதனை செய்ய வேண்டும்’ என கூறியுள்ளனர்.
மேலும், அவர் வைத்திருந்த பணப் பையை பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாகுல் ஹமீது கூச்சலிட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. இதில் 3 பேர் தப்பிய நிலையில், மீதம் உள்ள மூவரை பொது மக்கள் இருசக்கர வாகனங்களில் சினிமா பாணியில் விரட்டி பிடித்துள்ளனர். பின்னர், அவர்களை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் சென்னை விஜயராகவபுரம் இளவரசன் (27), திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஜோதீஸ்வரன் (25), கே.கே.நகர் டேவிட் (32) என்பது தெரியவந்தது. மேலும், பணத்துக்காக சாகுல் ஹமீதை தாக்கி வழிப்பறி செய்ய மூன்று இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்தவர்களை போலீஸார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT