Published : 16 Jun 2025 03:17 PM
Last Updated : 16 Jun 2025 03:17 PM
ஓசூரில் விடுமுறை நாட்களில் தேசிய நெடுஞ்சாலையை இளைஞர்கள் ரீல்ஸ் தளமாக மாற்றி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் வீலிங் சாகசம் மற்றும் பைக் ரேஸ் நடத்தி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். போதிய போக்குவரத்து போலீஸார் இல்லாததால் இச்சிக்கல் நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொழில் நகரான ஓசூர் வழியாக பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை வழியாக தினசரி ஆயிரகணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களும், வாகனங்களும் செல்லும் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சில இளைஞர்கள் ரீல்ஸ் எடுக்கும் தளமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் வீலிங் சாகசம் செய்தும், பைக் ரேஸ் சென்றும் அதை பதிவு செய்து ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விடுமுறை நாட்களில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு ஓசூர் வழியாகச் சென்று திரும்பி வருகின்றனர். இதனால், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறை நாட்களில் ஓசூர் மாநகர சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கும். இச்சூழ்நிலையில், இளைஞர்கள் சாலையை ரீல்ஸ் தளமாகப் பயன்படுத்துவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே, நேற்று மதியம் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட 2 இருசக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்கள் அதிவேகமாக வீலிங் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் செல்போனில் ரீல்ஸ் பதிவு செய்தபடி சென்றனர். இதனால், இச்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறும்போது, “ஓசூரில் இருசக்கர வாகனங்களில் வீலிக் செய்வது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கேட்டால் மதுபோதையில் சுற்றும் இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், விடுமுறை நாட்களில் மாநகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அச்சமாக உள்ளது. போதிய அளவில் போக்குவரத்து போலீஸார் இல்லாததால் இவை தொடர்ந்து வருகிறது” என்றனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டபோது, “ஓசூரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மாநகராட்சியாகத் தரம் உயர்ந்த நிலையில் மாநகர போக்குவரத்து பிரிவில் போதிய அளவில் போலீஸார் நியமிக்கப்படவில்லை. விடுமுறை நாட்களில் மாநகரின் போக்குவரத்தைச் சீர் செய்வதே எங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இருப்பினும் வீலிக், பைக் ரேஸ் குறித்து தகவல் தெரிந்தால் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதை முழுமையாகத் தடுக்க போதிய போக்கு வரத்து போலீஸாரை பணி நியமிக்க வேண்டும். அதுவரை விடுமுறை நாட்களில் சட்டம் ஒழுங்கு போலீஸார் தேசிய நெடுஞ்சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, வீலிக் மற்றும் பைக் ரேஸை கட்டுப்படுத்தலாம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT