Last Updated : 14 Jun, 2025 10:43 PM

 

Published : 14 Jun 2025 10:43 PM
Last Updated : 14 Jun 2025 10:43 PM

2006-ல் மூணாறில் கொல்லப்பட்ட சென்னை நபர்: மேகாலயா தேனிலவு கொலை சம்பவ ஒற்றுமை

மூணாறு அருகே உள்ள குண்டாலா அணை பகுதி.

கடந்த 2006-ல் மூணாறில் கொல்லப்பட்ட சென்னை நபரின் கொலை வழக்கும், 19 ஆண்டுகளுக்கு பிறகு அதே பாணியில் மேகாலயாவில் கொல்லப்பட்ட இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்சியின் கொலை சம்பவமும் ஒரே பாணியில் நடத்தப்பட்ட ஒற்றுமையை கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

2006-ல் நடந்தது என்ன? - கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை - பம்மலை சேர்ந்த 30 வயதான சங்கருக்கு 24 வயதான வித்யாலட்சுமி என்று பெண்ணோடு திருமணம் நடந்தது. இருவரும் தேனிலவுக்காக கேரள மாநிலம் மூணாறு சென்றனர். ஜூன் 16-ம் தேதி சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சூர் சென்ற அவர்கள், மறுநாள் காலை குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து வாடகை டாக்சி மூலம் மூணாறு சென்றனர். அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். தொடர்ந்து மறுநாள் காலை மூணாறு பகுதியில் உள்ள குண்டாலா அணைக்கு சென்றனர். அங்கு படகு சவாரி முடித்த பிறகு அணையை ஒட்டி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றனர்.

அடுத்த சில நிமிடங்களில் பதட்டத்துடன் டாக்சியை நோக்கி வந்த வித்யாலட்சுமி, தனது கணவரை தாக்கிய இரண்டு பேர், தங்களது பணம் மற்றும் உடமைகளை பறித்து சென்றதாகவும். அதை தடுக்க முயன்ற தனது கணவர் அனந்தராமனை அவர்கள் கொலை செய்து விட்டதாகவும் டாக்சி ஓட்டுநரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் இரண்டு பேர் குண்டாலா அணையில் இருந்து ஆட்டோ மூலம் மூணாறு நகர பகுதி நோக்கி சென்றனர். அப்போது ஆட்டோவுக்கு எதிர்புறம் போலீஸ் வாகனம் கடந்து சென்றதை பார்த்து இருவரும் பதட்டம் அடைந்தனர். அதோடு வேகமாக செல்லுமாறு ஆட்டோ ஓட்டுநரிடம் கூறினர். அவர்கள் மீது ஆட்டோ ஓட்டுநருக்கு சந்தேகம் வந்துள்ளது. இருப்பினும் அதை காட்டிக் கொள்ளாமல் ஆட்டோவை அவர்கள் தங்கி இருந்த விடுதி நோக்கி செலுத்தி உள்ளார். அங்கு அவர்களை இறக்கிவிட்டு பிறகு தகவலை போலீஸுக்கு தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவர்கள் இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். அங்கு ஏற்கெனவே வித்யாலட்சுமி இருந்தார். தனது கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து அவர் புகார் அளித்திருந்தார். அதில் தனது பெயரை ஸ்ரீவித்யா என குறிப்பிட்டிருந்தார். போலீஸ் விசாரணையில் அந்த இரண்டு பேரின் பெயர் ஆனந்த் மற்றும் அன்புராஜ் என தெரியவந்துள்ளது. அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அதில் ஆனந்த் வசம் சென்னை டூ மூணாறு பயண திட்டம் குறித்து கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று கிடைத்துள்ளது. அது குறித்து விசாரித்ததில் அதை தன்னிடம் வித்யாலட்சுமி கொடுத்தார் என தெரிவித்தார்.

தொடர் விசாரணையில் பள்ளி பருவத்தில் இருந்தே ஆனந்த் மற்றும் வித்யாலட்சுமி காதலித்ததும். சாதி மற்றும் பொருளாதார பின்னணி காரணமாக அவர்களது காதலுக்கு வித்யாலட்சுமியின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு அனந்தராமன் உடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சென்னையில் இருந்து திருச்சூருக்கு அனந்தராமன் மற்றும் வித்யாலட்சுமி பயணித்த அதே ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஆனந்த் மற்றும் அன்புராஜ் பயணித்துள்ளனர். திருச்சூரில் வித்யாலட்சுமியை சந்தித்து பேசி உள்ளனர். தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்து மூணாறு சென்றனர். அங்கு தம்பதியர் தங்கிய விடுதியில் அறை எடுக்க முடியாத காரணத்தால் வேறொரு தனியார் விடுதியில் தங்கி உள்ளனர்.

பின்னர் குண்டாலா அணை பகுதியில் அனந்தராமனை அவரது கேமராவால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். மூன்று பேரின் ஆடையில் இருந்த ரத்த மாதிரி அனந்தராமனின் ரத்தம் தான் என போலீஸார் உறுதி செய்தனர்.

இதோடு ஆனந்த் - வித்யாலட்சுமி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அழைப்பு பதிவு, அனந்தராமனின் சகோதரரிடம் டாக்சி ஓட்டுநர் கொலை செய்ததாக சொன்னது போன்றவை ஆனந்த், அன்புராஜ் மற்றும் வித்யாலட்சுமிக்கு எதிராக இருந்தது. அவர்கள் மூவரும் தேவிகுளம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஓராண்டுக்கு பிறகு இந்த வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனந்த் மற்றும் வித்யாலட்சுமிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் அன்புராஜுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது நீதிமன்றம். 2012-ல் தீர்ப்பை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தை மூவரும் நாடினார்கள். அங்கு அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேகாலயா தேனிலவு கொலை வழக்கில் ஒரு வார காலத்துக்கு பிறகே போலீஸார் 5 பேரை கைது செய்தனர். ஆனால், மூணாறு தேனிலவு கொலை வழக்கில் சம்பவம் நடந்த அன்றே போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் ஆட்டோ ஓட்டுநரின் சாட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேகாலயாவில் நடந்து என்ன? - மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை.

கடந்த ஜூன் 2-ம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மீட்கப்பட்டது. மேகாலயா போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி சோனம், காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் காவல் துறையினர் கூறிய புதிய தகவல்கள் வெளியானது. அதன் விவரம்: மேகாலயா சம்பவத்துக்கு முன்பே சோனம் 3 முறை ராஜா ரகுவன்சியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. முதலில் குவஹாத்தியில் வைத்து ராஜா ரகுவன்சியை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது.

அடுத்ததாக மேகாலயாவின் சோஹ்ராவில் வைத்து இரண்டு முறை கணவரை கொலை செய்ய சோனம் முயற்சித்துள்ளார். அதுவும் நிறைவேறவில்லை. இறுதியாக 4-வது முயற்சியில் வெய்சாடோங் அருவியில் வைத்து தனது கணவரை கொல்லும் திட்டத்தை சோனம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே ரகுவன்சியை சோனம் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். முதல் மூன்று முறை உடலை அப்புறப்படுத்த இடம் கிடைக்கவில்லை என்பதால் கணவரை கொல்லும் திட்டத்தை காதலன் ராஜ் குஷ்வாகவுடன் சேர்ந்து சோனம் ஒத்திப்போட்டுள்ளார். இறுதியில் வெய்சாடோங்கில் சூழ்நிலை சாதகமாக இருந்ததை பயன்படுத்தி அவர்கள் கொலைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இதற்கு மூளையாக ராஜ் குஷ்வாகா செயல்பட்டுள்ளார்.

அதேபோன்று இந்த கொலைத் திட்டத்தில் திடுக்கிடும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், ரகுவன்சியின் மனைவி சோனம் என்று அடையாளம் காட்டுவதற்காக ஒரு பெண்ணை கொன்று அவரது உடலை எரிக்க கொலையாளிகள் திட்டமிட்டிருந்தனர். இதன் மூலம், சோனம் தலைமறைவாக இருக்க அதிக நேரம் கிடைக்கும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது என்று காவல் துறையினர் விவரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x