Published : 14 Jun 2025 06:21 PM
Last Updated : 14 Jun 2025 06:21 PM
சென்னை: இண்டியாமார்ட் ஆன்லைன் தளம் வாயிலாக நடந்த சட்டவிரோத ‘ஸ்கெடியூல் எச்’ மருந்துகள் விற்பனை தடுக்கப்பட்டதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய மருந்துகளை சட்டவிரோதமாக ஏதேனும் ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு காஞ்சிபுரம் காவல் துறை இண்டியாமார்ட் இன்டர்மெஷ் லிமிடெட் என்ற ஆன்லைன் தளத்துக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தது. அதில், மாநிலம் முழுவதும் இளைஞர்களுக்கு அந்தத் தளத்தின் மூலம் ஸ்கெட்யூல் ஹெச் (Schedule H) வகை மருந்துகளை சட்டவிரோதமாக விற்கப்படுவதாக காவல் துறை குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக, போதைப் பொருட்கள் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களிடம் பெற்றப்பட்ட தகவலின்படி சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளத்துக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதியில் இருந்து மட்டும் இந்த வகையைச் சேர்ந்த 10,000 மாத்திரைகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. அந்த இளைஞர்கள் வெளி மாநிலங்களில் உள்ள மருந்துகங்களில் இருந்து இந்த மருந்தை மருந்துச் சீட்டு இல்லாமல் வாங்கியுள்ளனர். பின்னர் அவற்றை சேர்த்து வைத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் இண்டியாமார்ட் தளம் மூலம் ‘ஸ்கெட்யூல் ஹெச்’ மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இண்டியாமார்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு காஞ்சிபுரம் காவல் துறை முன் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறுகையில், “நாங்கள் அந்த நிறுவனத்தின் சீனியர் விற்பனைப் பிரதிநிதிகளை அழைத்து, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களில் சிலர் எப்படி இந்தத் தளத்தை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஸ்கெட்யூல் ஹெச் வகை மருந்துகளை வாங்குகின்றனர் என்பதை எடுத்துரைத்து, அதனை சமூக அக்கறையோடு தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
எங்களின் விளக்கங்களை ஏற்றுக்கொண்ட இண்டியாமார்ட், நாங்கள் சுட்டிக்காட்டிய 100 மருந்துகள் விற்பனையை தங்களின் ஆன்லைன் தளத்தில் பூரணமாகத் தடை செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக மெயில் அனுப்பியது. அதன்படி அந்தத் தளத்தின் வாயிலாக அண்மைய நாட்களாக சட்டவிரோத மருந்துகள் விற்பனை ஏதும் நடைபெறவில்லை என்பது எங்கள் கண்காணிப்பில் உறுதியாகியுள்ளது. போதைப் பொருளுக்கு எதிரான எங்களின் நடவடிக்கையில் இது ஒரு மைல்கல்” என்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் கூறுகையில், “பிற மாநிலங்களில் உள்ள போலியான மருந்துக் கடைகள், இண்டியாமார்ட் ஆன்லைன் தளத்தில் தங்களை பட்டியலிட்டுக் கொண்டு, அதன் வாயிலாக தமிழக இளைஞர்களுக்கு வலை விரித்து வாட்ஸ் அப் / இன்ஸ்டாகிராம் மூலம் இந்த மருந்துகளை பன்மடங்கு அதிக விலை வைத்து விற்றுள்ளன. தாங்கள் எங்கிருந்து அனுப்புகிறோம் என்பதை காவல் துறை கண்டுபிடிக்காமல் இருக்க போலி முகவரியின் மூலம், கூரியரில் அனுப்பியுள்ளனர்” என்றார்.
விசாரணை அதிகாரியாக இருந்த திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஸ்ரேயா குப்தா கூறுகையில், “இண்டியாமார்ட் தளம் வெளி மாநிலங்களில் உள்ள சில மருந்து நிறுவனங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் வட சென்னையில் ஓர் இளைஞர் இந்தத் தளத்தில் வாங்கிய மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டதில் தான் உயிரிழந்தார்” என்று நினைவுகூர்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT