Published : 14 Jun 2025 05:49 AM
Last Updated : 14 Jun 2025 05:49 AM
சென்னை: நடிகர் சங்கம் பெயரில் ரூ.40 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நடிகர் சங்கத்தின் முன்னாள் மேலாளர் பாலமுருகன் தூண்டுதலின் பேரில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சங்கர் பாபு மற்றும் முன்னாள் உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து எவர்கிரீன் மீடியா என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பை நடிகர் சங்கத்தின் ஒரு துணை அமைப்பு என்று பொதுவெளியில் சட்ட விரோதமாக விளம்பரம் செய்து வருகிறார்கள்.
நடிகர் சங்க பெயரை பயன்படுத்தி அனைத்து உள்ளூர், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து விளம்பரங்கள் ஒளிபரப்புவதற்கான உரிமைகளை பெற்று, அதன் மூலம் பல நபர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மோசடியாக ஏமாற்றி வந்துள்ளனர். இது தொடர்பாக எங்களுக்கு வந்த புகார்களின் பேரில் நாங்கள் விசாரணை செய்தோம். அப்போது சட்டவிரோதமான இந்த நடவடிக்கை மூலமாக சுமார் ரூ.40 லட்சம் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரையும், எங்களின் அலுவலக முகவரியையும், சங்க நிர்வாகிகளின் பெயரையும் தவறாக பயன்படுத்தி, சங்கத்தை ஏமாற்றி மோசடி செய்துவரும் பாலமுருகன், சங்கர் பாபு, சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட தேனாம்பேட்டை போலீஸார் சி.எஸ்.ஆர். ரசீது வழங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT