Published : 14 Jun 2025 06:17 AM
Last Updated : 14 Jun 2025 06:17 AM
செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகர், வீரவாஞ்சி தெருவைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ் என்ற ‘மிளகாய்பொடி’ வெங்கடேஷ். இவர் பாஜகவில் ஓபிசி அணி மாநில செயலாளராக உள்ளார். இவர் மீது ஆந்திரா, தெலங்கானாவில் செம்மரம் கடத்தல் வழக்கு, ஆவடி காவல் ஆணையரகத்தில் பண மோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டுதல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபல எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் டீலராக உள்ள சென்னை முகலிவாக் கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், செங்குன்றம் அருகே உள்ள மொண்டியம்மன் நகர், பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் எல்.இ.டி பல்ப், டி.வி உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறார்.
மொண்டியம்மன் நகரை சேர்ந்த கணபதி லால் என்பவருக்கு விநியோகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு தரவேண்டிய ரூ.48 லட்சத்தை அவர் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், மற்றொரு டீலரிடம் பெற்ற பொருட்களுக்கும் கணபதிலால் பணம் தரவில்லை. ஆகவே, அந்த பணத்தை பெற்றுத் தரும்படி, வெங்கடேஷை டீலர்கள் இருவரும் அணுகியுள்ளனர்.
முன்பணமாக ரூ.2 லட்சம் இதையடுத்து, பணத்தை வசூலித்துக் கொடுக்க 10 சதவீத கமிஷன் தர வேண்டும் எனக்கூறி முன்பணமாக வெங்கடேஷ் ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், கணபதிலாலிடமிருந்து பணத்தை பெற்றுக் கொடுக்காமல் அவருடன் சேர்ந்து கொண்டு டீலர்களை மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து, ஆவடி காவல் ஆணையரகத்தில் வெங்கடேஷ் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று மாலை வெங்கடேஷை கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது. கைதான ‘மிளகாய்பொடி’ வெங்கடேஷ், சமீபத்தில் மதுரைக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவரே வெளியிட்டு, பலமாநில உயர் போலீஸ் அதிகாரி களுக்கும் ‘டேக்’ செய்திருந்தார். இதன்மூலம் தான் செல்வாக்கு நிறைந்தவர் என போலீஸாருக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT