Published : 13 Jun 2025 12:02 PM
Last Updated : 13 Jun 2025 12:02 PM
கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே மேலக்கரத்தை பகுதியில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூரண ஜெய ஆனந்த் (55). இவர் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்திருந்தார். அவருடன் அவரது பாதுகாவலர் நவீன்குமார், வழக்கறிஞர் தனஜெயன் ராமமூர்த்தி, நீதிமன்ற பணியாளர் ஸ்ரீதர் குமார் (37), நீதிமன்ற உதவியாளர் உதயசூரியன் ஆகியோர் வந்தனர். காரை நீதிமன்ற பதிவு எழுத்தர் வாசுராமநாதன் என்பவர் ஓட்டினார்.
சாமி தரிசனம் முடித்துவிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். காலை சுமார் 9 மணி அளவில், மேலக்கரந்தையை கடந்த போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில், நீதிமன்ற பணியாளர்கள் ஸ்ரீதர் குமார், வாசு ராமநாதன், பாதுகாவலர் நவீன்குமார், வழக்கறிஞர் தனஜெயன் ராமமூர்த்தி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நீதிபதி பூரண ஜெய ஆனந்த், நீதிமன்ற பணியாளர் உதயசூரியன் ஆகியோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற மாசார்பட்டி போலீஸார் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நீதிபதி மற்றும் நீதிமன்ற பணியாளரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுநர் கடலூர் மாவட்டம் பொம்மரக்குடியை சேர்ந்த விஜயராஜ் (27) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT