Published : 13 Jun 2025 07:12 AM
Last Updated : 13 Jun 2025 07:12 AM

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் பணம் கையாடல்: ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் பணம் கையாடல் செய்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கணக்காளராகவும், கண்காணிப்பாளராகவும் பணியாற்றிய ஜஹாருல்லா. காப்பாளர்களாக பணியாற்றிய ஜவஹர், ஜெயராஜ் மற்றும் உதவி இயக்குனராக பணியாற்றிய தேவதாஸ் ஆகியோர் கடந்த 2003 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் அருங்காட்சியக நுழைவு கட்டணம், காட்சி அரங்க கட்டணம், ஊழியர்களுக்கான ஊதியம் என பல வகைகளில் ரூ. 5.44 லட்சத்தை கையாடல் செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 4 வழக்குகளை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

இந்த 4 வழக்குகள் மீதான விசாரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பிரியா முன்பாக நடந்தது. வழக்கு விசாரணையின்போது உதவி இயக்குநரான தேவதாஸ் இறந்து விட்டதால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.

அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஜஹாருல்லாவுக்கு 4 வழக்குகளிலும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 8 லட்சம் அபராதம் விதித்தும், இதேபோல ஜவஹருக்கு 3 வழக்குகளில் தலா 5 ஆண்டுகள் மற்றும் ரூ. 4.5 லட்சம் அபராதம் விதித்தும், ஜெயராஜூக்கு 2 வழக்குகளில் தலா 5 ஆண்டுகள் மற்றும் ரூ. 3 லட்சம் அபராதம் விதி்த்தும் தீர்ப்பளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x