Published : 12 Jun 2025 08:06 PM
Last Updated : 12 Jun 2025 08:06 PM
மதுரை: மதுரையில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பிரபல ரவுடியின் கூட்டாளியை வெட்டிக் கொன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை கரிமேடைச் சேர்ந்தவர் குட்டி சாக்கு என்ற அஜய் பிரசன்ன குமார் (27). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் கைதாகி சிறையிலிருந்த அவர் 4 நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அப்பகுதியைச் சேர்ந்த அஜய் பிரசன்ன குமாரின் நண்பர் ஒருவரை சிலர் தாக்கியுள்ளனர். அவர்களுடன் சமரசம் பேசுவதற்காக அஜய் பிரசன்ன குமார் நண்பரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பின், அக்கும்பல் அஜய் பிரசன்ன குமாரின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரிடம் தகராறு செய்து மிரட்டிச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே, நேற்றிரவு வீட்டில் தனிமையில் தூங்கிக்கொண்டிருந்த அஜய் பிரசன்ன குமாரை, அக்கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கரிமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அஜய் பிரசன்ன குமாரின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையான அஜய் பிரசன்ன குமார் ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனிடையே, அஜய் பிரசன்ன குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் சிறைக்குள் இருந்தபோதே பல மிரட்டல்கள் இருந்ததாகவும், ஜாமீனில் வெளியே வந்த பிறகு திட்டமிட்டு அஜய் பிரசன்ன குமாரை கொலை செய்துள்ளதாக அவரது அண்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பழக்கடை சுந்தர் (38) அவரது தம்பி தொத்தா சுந்தர் (36) மற்றும் பாண்டியராஜன் (26) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT