Published : 12 Jun 2025 02:30 PM
Last Updated : 12 Jun 2025 02:30 PM
பதிண்டா: பஞ்சாபைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலம் கமல் கவுர் பதிண்டாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆதேஷ் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
லூதியானாவில் உள்ள லட்சுமண் நகரில் வசிக்கும் கமல் கவுர் என்று அழைக்கப்படும் காஞ்சன் திவாரி இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸைக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று பதிண்டா மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட வாகனம், அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் காஞ்சன் பிரபலமாக உள்ளவர், அத்துடன் அவர் ஆன்லைனில் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இந்த மர்ம மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் இன்று அவரது சடலத்தை பிரேத பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து லூதியானா காவல் கண்காணிப்பாளர் நரேந்திர சிங் கூறுகையில், “நேற்று இரவு, பதிண்டாவில் உள்ள ஆதேஷ் மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண் கமல் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவரது உண்மையான பெயர் காஞ்சன் கவுர். அவர் லூதியானாவைச் சேர்ந்தவர் ஆவார்.
கமல் கவுர் ஒரு சமூக ஊடக பிரபலம், அவர் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி வீடியோக்களை பதிவிடுவதில் பெயர் பெற்றவர். இந்த மரணம் குறித்து நாங்கள் அனைத்து அம்சங்களிலிருந்தும் விசாரித்து வருகிறோம்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT