Published : 12 Jun 2025 06:32 AM
Last Updated : 12 Jun 2025 06:32 AM

தங்கையின் காதல் திருமணத்தால் முன்விரோதம்: நெடுஞ்சாலை பொறியாளர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை

திருச்சி: தங்கையின் காதல் திருமணம் தொடர்பான முன்விரோத தகராறில் நெஞ்சாலைத் துறைப் பொறியாளர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் திருமங்கலம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கிருபன்ராஜ்(28). நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளரான இவர், காஞ்சிபுரத்தில் தங்கிப் பணிபுரிந்து வந்தார். இவர், மனைவி, குழந்தையைப் பார்க்க அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கிருபன்ராஜின் தங்கை கிரிஜாவும், அதே ஊரைச் சேர்ந்த சித்தார்த்தன் மகன் கவியரசன்(33) என்பவரும் காதலித்து வந்தனர். இதை கிருபன்ராஜ் கண்டித்துள்ளார். ஆனால், எதிர்ப்பையும் மீறி கவியரசனும், கிரிஜாவும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால், கிருபன்ராஜ் குடும்பத்துக்கும், கவியரசன் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

2021 ஏப்ரல் 25-ம் தேதி ஊருக்கு வந்திருந்த கிருபன்ராஜ், மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த கவியரசன் “உன் தங்கையை திருமணம் செய்து கொண்டேன் என்பதற்காக என்னை முறைத்துப் பார்ப்பாயா?” எனக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கவியரசன், அவரது சகோதரர் கலைவாணன்(29), நண்பர் பிரேம் நிவாஸ்(34) ஆகியோர் சேர்ந்து கிருபன்ராஜை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கிருபன்ராஜ், லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக லால்குடி போலீஸார் விசாரணை நடத்தி, கவியரசன், கலைவாணன், பிரேம் நிவாஸ் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.சுவாமிநாதன், குற்றம்சாட்டப்பட்ட கவியரசன், கலைவாணன், பிரேம் நிவாஸ் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.6,500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, கவியரசன் உட்பட 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கே.பி.சக்திவேல் ஆஜராகினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x