Published : 20 May 2025 05:51 PM
Last Updated : 20 May 2025 05:51 PM
காங்கயம்: காங்கயம் அருகே மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் மறையூரைச் சேர்ந்தவர் சி.ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40), மகள்கள் மாநேத்ரா (15), மவுனஸ்ரீ (11). ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜானகி செவிலியராகப் பணியாற்றி வந்தார். எனவே, குடும்பத்தினருடன் அறச்சலூரில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், 4 பேரும் கேரளா சென்றுவிட்டு இன்று அதிகாலை அறச்சலூருக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை ராஜா ஓட்டி வந்தார். காலை திருப்பூர் மாவட்டம் காங்கயம் நத்தக்காடையூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இதில், ராஜா, ஜானகி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மாநேத்ரா, மவுனஸ்ரீ ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீஸார் இருவரைரையும் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியிலேயே மாநேத்ரா உயிரிழந்தார். மவுனஸ்ரீ திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிரிழந்த 3 பேரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “காரை ஒட்டி வந்த ராஜா, தூக்கக் கலக்கத்தில் மரத்தின் மீது மோதி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மவுனஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT