Last Updated : 20 May, 2025 05:24 PM

 

Published : 20 May 2025 05:24 PM
Last Updated : 20 May 2025 05:24 PM

ஏஐ செயலியை விற்பதாக ரூ.3.5 கோடி மோசடி - சென்னை பொறியியல் பட்டதாரி கைது

புதுச்சேரி: ஏஐ செயலியை விற்பதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி செய்த சென்னை பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார்.

ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் வணிகத்துக்கான செயலி இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் சமூக வலைதளத்தில் விளம்பரம் வெளியானது. இதைப் பார்த்த பலரும் அந்தச் செயலியை வாங்கி, ரூ.40 ஆயிரம் செலுத்தியுள்ளனர். ஆனால் அந்த செயலி வேலை செய்யவில்லை. மேலும், செயலியை விற்றவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 7 பேர் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸில் புகார் தெரிவித்தனர்.

விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர் சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த அஸ்வின் விக்னேஷ் (32) என்பதும், பொறியியல் பட்டதாரியான இவர் நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டோரிடம் இந்த போலி செயலியை விற்று, ரூ.3.5 கோடி வரை மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் சென்னை சோழிங்கநல்லூரில் பதுங்கியிருந்த அஸ்வின் விக்னேஷை இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 14 லேப்டாப், கார், ரூ.7.60 லட்சம் ரொக்கம், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து புதுச்சேரி சிறப்பு காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா கூறும்போது, “பொறியியல் பட்டதாரியான அஸ்வின் விக்னேஷ், டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர், சென்னையில் தனியாக நிறுவனம் தொடங்கி, மோசடியில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அந்நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்த நிறுவனமா என்பதை விசாரித்து, பின்னர் பணத்தை செலுத்த வேண்டும்” என்றார். எஸ்.பி. பாஸ்கரன், ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x