Published : 20 May 2025 04:44 PM
Last Updated : 20 May 2025 04:44 PM
திருப்பூர்: திருப்பூர் அருகே கரைப்புதூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூரில் தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த ஆலையில் நேற்று சாயக் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருப்பூர் சுண்டமேட்டை சோ்ந்த சரவணன் (30) வேணு கோபால் (31) ஹரி (26), சின்னச் சாமி (36) ஆகிய 4 பேர் சுமார் 6 அடி உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.
சுத்தம் செய்ய இறங்கிய சிறிது நேரத்தில் சின்னச்சாமிக்கு முச்சு திணறல் ஏற்படுவது போல் இருந்துள்ளது. இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் வெளியே வந்துள்ளார். சரவணன், வேணு கோபால், ஹரி ஆகிய 3 பேரும் தொடா்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனை மேல் இருந்தவாறு சின்னச்சாமி கண்காணித்துள்ளார். இதற்கிடையே, சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ஒருவர் பின் ஒருவராக விஷ வாயு தாக்கி சரவணன், வேணு கோபால், ஹரி ஆகிய 3 பேரும் மயங்கி விழுந்துள்ளனா்.
இதனால் அதிர்ச்சியடைந்த சின்னச்சாமி சக தொழிலாளா்களை கூச்சலிட்டு அழைத்துள்ளார். மேலும், 3 பேரும் ஆட்டோ மூலம் மீட்கப்பட்டு திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனா். இதற்கிடையே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சரவணன் மற்றும் வேணு கோபால் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். அவா்களது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவரும் பரிதாபமாக பலியானார். சாயக் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷ வாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT