Published : 20 May 2025 04:42 AM
Last Updated : 20 May 2025 04:42 AM
தஞ்சாவூர்: சர்க்கஸ் கூடாரத்தில் இருந்த ஒட்டகத்தை திருடியது யார் என்று, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தஞ்சாவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 1990-களுக்கு முன்பு வரை சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் சிங்கம், புலி, யானை, கொரில்லா, கரடி என பல்வேறு வகையான வன விலங்குகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றைப் பார்ப்பதற்காகவே மக்கள் குடும்பத்துடன் சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள். சர்க்கஸ் என்றாலே திருவிழாபோல மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
பின்னர் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்ததால், நாடு முழுவதும் சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகளில் வன விலங்குகள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. இதனால் மக்களுக்கு சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் ஆர்வம் குறைந்து, அவற்றுக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் வருமானம் குறைந்து, பல முன்னணி சர்க்கஸ் நிறுவனங்கள் கூட மூடப்பட்டன. தற்போது செயல்பட்டு வரும் சில சர்க்கஸ் நிறுவனங்களிலும் ஒட்டகம், குதிரை, கிளி போன்றவை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூரில் முகாமிட்டுள்ள ஒரு சர்க்கஸ் நிறுவனத்தில் இருந்த ஒட்டகம் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வேட்டமலிக்களம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (25). இவர் தனது குடும்பத்தினருடன் ஊர் ஊராகச் சென்று சர்க்கஸ் நடத்துவது வழக்கம். அதன்படி, தற்போது தஞ்சாவூர் கீழ வஸ்தாசாவடி பகுதியில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி இரவு சர்க்கஸ் காட்சி முடிந்த பின், விஜய் தனது குடும்பத்தினருடன் அங்கு தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது கூடாரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் பல்வேறு இடங்களில் ஒட்டகத்தை தேடிப் பார்த்தும், கிடைக்கவில்லை. இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸில் விஜய் புகார் செய்தார். இதன்பேரில், உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், தஞ்சாவூர் ஞானம் நகர் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில், ஒட்டகத்தை ஒருவர் ஓட்டிச் செல்லும் காட்சி பதிவாகிஉள்ளது. அந்த நபர் யார்? எதற்காக ஒட்டகத்தை திருடிச் சென்றார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT