Published : 18 May 2025 06:06 PM
Last Updated : 18 May 2025 06:06 PM
மதுரை: திருமங்கலத்தில் குடும்பத் தகராறு, பங்காளி சண்டையாக மாறிய விவகாரத்தில் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள ஏ.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன்கள் மருதுபாண்டி (45), உதயக்குமார் (40), மணிகண்டன் (35). முத்துவின் தம்பி கருணாநிதியின் மகன் மாரிச்சாமி (40). இவர் எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் பாறைப்பட்டியில் அருகருகே வசிக்கின்றனர். இவர்களுக்குள் சொத்து மற்றும் பணம், கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்தது.
இந்நிலையில் இன்று மணிகண்டன் அவரது மனைவி மல்லிகாவுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரும் வீட்டுக்கு வெளியே வந்து, ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். இதை அறிந்த மாரிச்சாமி முன்பகையை மனதில் வைத்து தன்னை திட்டுவதாக மணிகண்டனிடம் தட்டிக் கேட்டுள்ளார். குடும்பச் சண்டை பிறகு பங்காளி தகராறாக மாறியது. அங்கு வந்த உதயகுமார் சண்டையை விலக்கிவிட்டார்.
இருப்பினும், வீட்டுக்குள் சென்ற மாரிச்சாமி துப்பாக்கியை எடுத்து வந்து மிரட்டியுள்ளார். தொடர்ந்து ஆவேசத்தில் அவர் 5 முறை துப்பாக்கியால் சுட்டதில் சகோதரர் உதயகுமாருக்கு விலா, வயிறு பகுதியில் இரண்டு குண்டுகள் பாய்ந்து மயங்கினார். ஆனாலும், அவர் தொடர்ந்து சுட்டதில் அருகே கடைக்கு சென்ற கவியரசு என்பவர் மகன் கிஷோருக்கும் (10) வலது கை தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். சுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உதயகுமார், கிஷோரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிறகு மேல் சிகிச்சைகென மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மாரிச்சாமியை போலீஸார் கைது செய்து, அவரது துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT