Published : 14 May 2025 06:53 AM
Last Updated : 14 May 2025 06:53 AM
சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் சிகிச்சையிலிருந்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை சேத்துப்பட்டு, மங்களபுரத்தைச் சேர்ந்தவர் சுகந்தி (38). இவர் தனது தாய் ஷீலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 9-ம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஷீலா தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். சுகந்தி உடனிருந்து கவனித்தார்.
கடந்த 10-ம் தேதி இரவு, சுகந்தி உணவு வாங்குவதற்காக மருத்துவமனை வார்டிலிருந்து வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, அவரது தாயார் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் எடையுள்ள தங்க குண்டுமணிகள் மற்றும் தாலியை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சுகந்தி புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் திருட்டில் ஈடுபட்டது சென்னை சூளைமேடு பாரி தெருவைச் சேர்ந்த அன்னபாக்கியம் (51) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீஸார் திருடுபோன நகைகளை மீட்டனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட அன்னபாக்கியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேறொரு நோயாளிக்கு உதவி செய்வதற்காக வந்திருந்ததும், பின்னர் வீட்டுக்கு செல்லும்போது, மயக்க நிலையிலிருந்த ஷீலாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலி மற்றும் குண்டுமணிகளை யாருக்கும் தெரியாமல் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT