Published : 06 May 2025 12:33 AM
Last Updated : 06 May 2025 12:33 AM

சென்னையில் வியாபாரியை தாக்கி ரூ.23 கோடி வைரத்தை கொள்ளையடித்த கும்பல் கைது: நடந்தது என்ன?

சென்னை/தூத்துக்குடி: சென்னையில் வைர வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.23 கோடி மதிப்புடைய வைர கற்களை கொள்ளையடித்து தப்பிய 4 பேர் கும்பல் தூத்துக்குடியில் பிடிபட்டனர்.

சென்னை அண்ணா நகர், 17-வது தெருவில் வசித்து வருபவர் வைர வியாபாரி சந்திரசேகர்(69). இவருக்கு இடைத்தரகரான வளசரவாக்கம் காமாட்சி நகரைச் சேர்ந்த விஜய் (24) என்பவரது அறிமுகம் கிடைத்தது. 2 நாட்களுக்கு முன்னர் விஜயை தொடர்பு கொண்ட சந்திரசேகர் தன்னிடம் ரூ.23 கோடி மதிப்புடைய பழமையான வைர கற்கள் உள்ளது. அதை வாங்க யாரேனும் இருந்தால் தெரிவிக்கவும் என கூறியுள்ளார். சிறிது நேரத்தில், 'நகைகளை வாங்க ஒருவர் தயாராக உள்ளார். அவர் நகைகளை நேரில் பார்த்தால்தான் வாங்குவேன் என தெரிவிக்கிறார். வீட்டுக்கு நேரில் அழைத்து வரவா?' என கேட்டுள்ளார்.

இதற்கு சந்திரசேகர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விஜய் ஒருவரை அழைத்து வந்து நகைகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளேன். அங்கு நகைகளுடன் வாருங்கள். நான் பணத்துடன் வந்து பெற்றுச் செல்கிறேன் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் சந்திரசேகர் வைர நகைகளுடன் வடபழனி நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். கூடவே நண்பர் மற்றும் மகளையும் சந்திரசேகர் அழைத்துச் சென்றுள்ளார். நகை வாங்க வந்தவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. உங்களை தனியாகத்தானே வரச்சொன்னோம். ஏன் மேலும் இருவருடன் வந்துள்ளீர்கள் என கேட்டதோடு, சந்திரசேகருடன் வந்த நபரை அருகில் உள்ள கடைக்கு சென்று டீ குடித்து வாருங்கள் எனவும் மகளை ஓட்டலுக்கு வெளியே காத்திருங்கள் எனக் கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்.

பின்னர், சந்திரசேகருடன் நகை தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒருவர் திடீரென சந்திரசேகரை தாக்கினார். பின்னர், அனைவரும் சேர்த்து தாக்கி அவரது வாயில் துணியை வைத்து திணித்தனர். தொடர்ந்து அவரை அறையில் கட்டிப்போட்டு விட்டு அவர் வைத்திருந்த வைர கற்களை கொள்ளையடித்து காரில் தப்பினர்.

நீண்ட நேரமாகியும் தந்தை வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள், ஓட்டல் அறை சென்று பார்த்தார். தந்தையின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். வடபழனி போலீஸார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல்கட்டமாக அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டது.

இந்நிலையில், கொள்ளைக் கும்பல் தூத்துக்குடி நோக்கிச் செல்வதாக தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட்ஜானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான போலீஸார் புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, நள்ளிரவில் வந்த சென்னை பதிவெண் கொண்ட ஒரு சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அதில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

விசாரணையில், அவர்கள் சந்திரசேகரிடம் வைரகற்களை கொள்ளையடித்த விஜய், அவரது கூட்டாளிகளான சென்னை ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ஜான் லாயிட் (34), திருவேற்காடு சிவன் கோயில் தெரு ரதீஷ் (28), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருண் பாண்டியராஜன் (32) என்பது தெரிந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீஸார் கைது செய்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வைத்தனர். இதையடுத்து, தனிப்படை போலீஸார் விமானம் மூலம் தூத்துக்குடி சென்று 4 பேரையும் சென்னை அழைத்து வந்தனர். முன்னதாக அவர்களிடமிருந்து வைர கற்கள், சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மீட்கப்பட்ட வைர கற்கள், நகை வியாபாரி சந்திரசேகரிடம் ஒப்படைக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x