Published : 02 May 2025 08:32 PM
Last Updated : 02 May 2025 08:32 PM
மதுரை: மதுரையில் ‘நியோமேக்ஸ்’ வழக்குகளை கையாண்ட சிறப்பு டிஎஸ்பி மணிஷா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். தொய்வின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்தார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நியோமேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவர் 2023-ல் ஜூன் மாதம் அளித்த புகாரில் மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தது. தொடர்ந்து அடுத்தடுத்து புகார்களும் குவிந்தன. இதுவரை 13 ஆயிரம் பேர் புகார் அளித்த நிலையில் நிறுவன இயக்குநர்கள், முகவர்கள் என, 126-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தென்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் அதிகமாக இருப்பதால் மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவில் நியோமேக்ஸ் வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக கையாளும் விதமாக மாற்றுப்பணியாக சென்னையில் இருந்து மணிஷா என்ற பெண் டிஎஸ்பி நியமிக்கப்பட்டு 2023 செப்டம்பர் முதல் ‘நியோமேக்ஸ் ’ வழக்குகளை கையாண்டார். இவ்வழக்குகளுக்கென சிறப்பு அறைகள் ஒதுக்கி, எஸ்ஐ-கள், காவலர்கள் என, பணியாற்றினர். இதுவரையிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியோமேக்ஸ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் ரூ.223 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இச்சூழலில் டிஎஸ்பி மணிஷா சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டிஎஸ்பி பரதசக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் இறுதிகட்டத்தில் டிஎஸ்பியை திடீரென மாற்றியது ஏன் என்ற கேள்விகளும், சர்ச்சையும் எழுந்துள்ளது. வழக்கில் சிக்கிய முக்கிய நபர்களின் அழுத்தம் காரணமாக அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. புதிய டிஎஸ்பி வழக்கின் விவரங்களை புரிந்துகொண்டு பணியாற்ற சில மாதம் ஏற்படலாம். ஆனாலும் தொய்வுவின்றி துரிதமாக நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என புகார்தாரர் பார்த்தசாரதி உள்ளிட்ட பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுகின்றனர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், “நியோமேக்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மூலம் பாதிக்கப்பட்டோரின் புகாரின்பேரில் ரூ.223 கோடி மதிப்பு சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரூ.223 கோடி என்பது அரசின் வழிகாட்டி மதிப்பு மட்டுமே. மார்க்கெட் மதிப்பை கணக்கிட்டால் 4 மடங்கு அதிகரிக்கலாம். ஏற்கெனவே 32 கோடிக்கு அரசாணை பெற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி மணிஷா இவ்வழக்கு விசாரணை அதிகாரியாக தொடரவேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தி நிலையிலும் அவர் மாற்றப்பட்டுள்ளார். ஆனாலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் உரிய தொகை கிடைக்க பொருளாதார குற்றப்பிரிவு தொய்வின்றி நடவடிக்கை எடுக்ககிறது,” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT