Published : 02 May 2025 06:28 AM
Last Updated : 02 May 2025 06:28 AM
திருவாரூர்: மன்னார்குடியில் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக பகிர்ந்த வங்கி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் குமார்(40). இவர், தனது மனைவி சுஜிதாவுடன் சேர்ந்து 2014 முதல் மன்னார்குடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி வரவு-செலவு செய்து வருகிறார். அந்த வங்கியில் பல்வேறு கடன்கள் பெற்று, வட்டி மற்றும் தவணை தொகையை முறையாக செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், திடீரென்று குமாரின் சிபில் ஸ்கோர் குறைந்துள்ளதை அறிந்த அவர், அதுகுறித்து விசாரித்தபோது, 2023-ம் ஆண்டு செப்டம்பரில் வங்கியில் மற்றொருவர் வாங்கிய கடனுக்கு குமாரின் பெயர் ஜாமீன்தாரராக சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
ஆனால், யாருடைய கடனுக்கும் ஜாமீன் அளிக்காத குமார், இதுகுறித்து வங்கியில் முறையிட்டார். அப்போது, ராஜாவின் கடனுக்கு தவறுதலாக குமாரின் பான் கார்டு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்பட்டு, ஜாமீன்தாரராக காட்டப்பட்டுவிட்டதாக வங்கித் தரப்பில் கூறி, அதை ரத்து செய்து, சிபில் ஸ்கோரும் உயர்த்தப்பட்டது.
இதில் திருப்தியடையாத குமார் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த ஜனவரியில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் மோகன்தாஸ், உறுப்பினர் பாலு ஆகியோர், வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக பகிர்ந்ததால் குமாருக்கு நஷ்டஈடாக ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரத்தை ஒரு மாத காலத்துக்குள் வங்கி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT