Published : 01 May 2025 04:39 AM
Last Updated : 01 May 2025 04:39 AM

நகைக்காக சித்தி மகளை கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை: புதுக்கோட்டை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுக்கோட்டை: நகைக்காக சித்தி மகளை கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை பொன் நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி சிவகாமி. இவரது மகள் லோகபிரியா(20). கடந்த 2019-ம் ஆண்டு பழனியப்பன் இறந்துவிட்டார். பின்னர், லோகபிரியாவுக்கு தமிழரசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர், கணவரின் அனுமதியுடன் தனது தாயார் வீட்டில் லோகபிரியா தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, சிவகாமியின் சகோதரி மகனான, திருமயம் அருகே பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் (எ) சுரேஷ்(32) அடிக்கடி சிவகாமி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். கடந்த 2021 ஏப். 27-ம் தேதி புதுக்கோட்டை பொன்நகரில் உள்ள லோகபிரியா வீட்டுக்குச் சென்ற சுரேஷ், அவரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் இல்லை என்று கூறியதால், அடகு வைப்பதற்காக அவரது தங்கச் சங்கிலியைக் கேட்டுள்ளார்.

ஆனால், லோகபிரியா நகையைக் கொடுக்க மறுத்ததால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், லோகபிரியாவை கத்தியால் குத்தியும், கம்பியால் தாக்கியும் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த ஒன்னேகால் பவுன் நகையை பறித்துச் சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுரேஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், 27 இடங்களில் கத்தியால் குத்தியதாலும், இரும்பு ராடால் அடித்ததாலும், இதை சாதாரண கொலையாக கருத முடியாது என்பதால், குற்றம் சாட்டப்பட்ட சுரேஷுக்கு கொலை செய்த குற்றத்துக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், பெண்ணை அடைத்து வைத்த குற்றத்துக்கு ஓராண்டும், நகை திருடிய குற்றத்துக்கு 10 ஆண்டுகளும் தண்டனை விதித்ததுடன், இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இதையடுத்து சுரேஷ் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேசன் ஆஜரானார். வழக்கை உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட கணேஷ் நகர் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x