Published : 30 Apr 2025 06:46 AM
Last Updated : 30 Apr 2025 06:46 AM

மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு: தாளாளர், ஆசிரியை கைது

மதுரையில் தொட்டிக்குள் விழுந்து சிறுமி உயிரிழந்த பள்ளிக்கு ‘சீல்' வைத்த கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை: மழலையர் பள்ளியில் திறந்துவைத்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக பள்ளித் தாளாளர் உட்பட 7 பேரை போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை கேகே.நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஸ்ரீஇளம் மழலையர் பள்ளி கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்படுகிறது. தனியார் பள்ளியான இதில் ப்ரீகேஜி, எல்கேஜி, யூகேஜி மற்றும் தினசரி குழந்தைகள் பராமரிப்பு (டே கேர்) ஆகியவை நடக்கின்றன. இதுதவிர, கடந்த ஒரு மாதமாக கோடைகால சிறப்பு வகுப்புகளும் நடந்து வருகின்றன.

மதுரை திருநகரைச் சேர்ந்த திவ்யா இப்பள்ளியை நடத்துகிறார். இங்கு கே.கே.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் படிக்கின்றனர்.

ஆருத்ரா

இப்பள்ளியில் யானைமலை ஒத்தக்கடையைச் சேர்ந்தவரும், தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியருமான அமுதன்-சிவஆனந்தி தம்பதியின் 4 வயது மகள் ஆருத்ரா படித்தார். நேற்று பள்ளிக்கு வந்த ஆரூத்ராவை காலை 11 மணியளவில் திடீரென காணவில்லை. பள்ளி வளாகம் முழுவதும் தேடிய நிலையில், அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் அண்ணாநகர் காவல் நிலையத்துக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் திரண்டனர். பின்னர் குழந்தையை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பெற்றோர், உறவினர்கள் குழந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

பின்னர், குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்த வந்த மற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை உடனடியாக வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் திவ்யா, ஆசிரியை வைரமணி.

மாநகர காவல் துணை ஆணையர் அனிதா, கோட்டாட்சியர் ஷாலினி, காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா மற்றும் பள்ளிக் கல்வி, வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, குழந்தை விழுந்து இறந்த தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தனர். 8 அடி ஆழமுள்ள தொட்டியில் ஓர் அடி உயரத்துக்கு தடுப்புச் சுவர் இருந்தாலும், தொட்டி நேற்று மூடப்படாமல் இருந்தது. பணியில் இருந்த பராமரிப்பாளர்கள், ஆசிரியைகள் ஆகியோர், குழந்தை தொட்டிப் பகுதிக்குச் சென்றதை கவனிக்காமல் இருந்துள்ளனர்.

பள்ளி வளாகத்தில் சில விதிமீறல்கள் இருப்பதும் தெரியவந்ததால் அதிகாரிகள் அப்பள்ளிக்கு சீல் வைத்தனர். மேலும், குழந்தை இறந்துத தொடர்பாக தொடர்பாக பள்ளித் தாளாளர் திவ்யா, ஆசிரியைகள், ஊழியர்கள் என 7 பேரிடம் அண்ணாநகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x