Published : 29 Apr 2025 08:27 AM
Last Updated : 29 Apr 2025 08:27 AM
சென்னை: சென்னையில் பெண்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் காவல் ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக்காப்’ என்ற பெயரில் நவீன பாதுகாப்பு சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு உள்பட அனைத்து விதமான குற்றங்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் சென்னை காவல் துறையில் காவல் ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக்காப்’ என்ற பெயரில் நவீன பாதுகாப்பு சாதனம் (இயந்திரம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு சாதனத்தில் 24 மணி நேரமும் 360 டிகிரி சுற்றளவில் கண்காணிக்கும் வகையில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் நேரடி காணொளி காட்சி பதிவு, குரல் தொடர்பு பதிவுகள், காவல் துறையும் ஆபத்தில் உள்ள பொதுமக்களும் உரையாடும் வசதி, அவசர அழைப்பு எச்சரிக்கை ஒலி வசதி, உயர் தர நவீன வீடியோ கேமரா மற்றும் மைக்ரோபோன் வசதி, ஜி.பி.எஸ் வசதி, மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு அழைப்பிற்கு உதவிடும் விரைவான நடவடிக்கைகள், உயிர் காக்கும் செயல்பாடுகளுடன் தகுந்த திறன் பயிற்சியுடன் கூடிய காவல் துறையினர் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்த சாதனத்தில் உள்ள ஒரு சிவப்பு நிற பொத்தானை ஆபத்தில் இருக்கும் நபரோ அல்லது அவருக்காக மற்றொரு நபரோ அழுத்துவதன் (தொடுதல்) மூலம் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பும், அருகில் உள்ளவர்களுக்கு ஒலி எழுப்பி எச்சரிக்கை சப்தம் ஏற்படுத்தி உதவிடவும், ஆபத்தில் உள்ளவர்க்கு வீடியோ கால் வசதி மூலம் நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவிக்கோரவும், ரோந்து காவல் வாகனங்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் நிகழ்வுகளை கண்காணித்து உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து வந்தடைந்து உரிய நடவடிக்கை எடுத்திடவும், கேமரா பதிவுகள் மூலம் நிகழ்வுகளை கொண்டு புலன் விசாரணையை தொடங்கி நடவடிக்கை எடுத்திடவும் பெரிதும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காவல் ’ரெட் பட்டன்- ரோபோட்டிக்காப்’’ பாதுகாப்பு சாதனம் சென்னையில் முதல் கட்டமாக 200 இடங்களில் வைக்கப்பட உள்ளது. சென்னையில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐ.டி நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வந்து செல்லும் இடங்களில் கண்காணிப்புக்காக வரும் ஜுன் மாதம் முதல் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT