Published : 28 Apr 2025 03:42 PM
Last Updated : 28 Apr 2025 03:42 PM
புதுச்சேரி: பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் இன்று (ஏப்.28) கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முதலாவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கருணாவை 4 தனிப்படை போலீஸார் தேடி வருவதாக எஸ்எஸ்பி கலைவாணன் தெரிவித்தார். மேலும், மதுபானக்கடை விவகாரத்தில் கொலை நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுவை கருவடிகுப்பம் சாமி பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரின் மகன் உமாசங்கர் (38). பாஜகவின் இளைஞரணியில் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர். இவர் லாட்டரி அதிபர் மாட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிறந்தநாளை கருவடிகுப்பத்தில்கொண்டாட ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். விழா ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டு திருமண மண்டபத்திலிருந்து வெளியே வந்த உமாசங்கரை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் உமாசங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதைத் தடுக்க முயன்ற நண்பர் அருள் ராஜுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதன்பின் அந்தக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் விசாரணை துவக்கினர். முக்கிய வழக்கு என்பதால் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மதியம் எஸ்எஸ்பி கலைவாணன் செய்தியாளர்களிடம் கூறியது: “கொலை சம்பவத்தைத் தொடர்ந்து தனிப்படைகள் அமைத்து 34 மணி நேரத்துக்குள் 8 பேரைக் கைது செய்துள்ளோம். குற்றச் சம்பவத்தில் மொத்தம் 12 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் மூளையாக கர்ணா என்ற திருநாவுக்கரசு செயல்பட்டுள்ளார். இதில் 9 பேர் சாமிபிள்ளைத் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
கருணாவுக்கும், இறந்த உமாசங்கருக்கும் தனியார் ஒயின்ஷாப் அமைவதில் எதிர்ப்பு தெரிவிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. அதேபோல் நிலத்தகராறு பிரச்சினையும் இருந்தது. 5 மாதங்களாகத் திட்டமிட்டு, இரண்டு முறை கொல்ல முயற்சி எடுத்துள்ளனர். சனிக்கிழமை இரவு தனியார் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர் போல் வேடமிட்டுச் சென்று உளவு பார்த்து தகவல் தந்துள்ளனர்.
அதையடுத்து முககவசம் அணிந்து நான்கு வண்டிகளில் வந்த கும்பல் கத்திகளைப் பயன்படுத்தித் தாக்குதலில் ஈடுபட்டு உமாசங்கரைக் கொன்றுள்ளனர். காலாப்பட்டு பகுதியில் கத்திகளை வீசியுள்ளனர். இதில் 4 கத்திகள், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளோம். இதில் கருணா தலைமை வகித்துள்ளார். தற்போது தலைமறைவாகவுள்ள கருணாவை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பிடிப்போம். அவன் மீது 4 கொலை வழக்குகள் உள்ளன. அவன் சம்பவ இடத்துக்கு வராவிட்டாலும் அவனது மூளைப்படிதான் செயல்பட்டுள்ளனர்.
மொத்தம் 12 பேரில் 8 பேரை கைது செய்துள்ளோம். இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணையில் இறந்தவரின் தந்தை புகார் தந்தப்படி அமைச்சருக்கு இவ்விஷயத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. கருணாவை பிடித்த பிறகு தொடர்ந்து எல்லா கோணத்திலும் விசாரிப்போம்.
ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். சிசிடிவி மற்றும் தொடர் விசாரணையில் ஏதும் தகவல் அப்போது கிடைக்கவில்லை. இதில் தமிழக கூலிப்படை ஏதும் இல்லை. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற எம்எல்ஏ கோரியதை கேட்கிறீர்கள். நாங்கள் 8 பேரை கைது செய்துவிட்டோம். சரியான திசையில் செல்கிறோம்.போலீஸார் அப்பகுதியில் இருந்தனர். எனினும் யார் பணியில் அங்கு இருந்தார்கள் என்பதையும் விசாரிப்போம்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT