Published : 26 Apr 2025 05:31 AM
Last Updated : 26 Apr 2025 05:31 AM
கள்ளக்குறிச்சி: மணல் கடத்தியவருடன் பேரம் பேசியதாக புகார் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மீது நடவடிக்கை கள்ளக்குறிச்சி மணல் கடத்தியவருடன் பேரம் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் உட்கோட்டப் பகுதியில் உள்ள எலவனாசூர்கோட்டை, எடைக்கல், திருநாவலூர், களமருதூர், எறையூர், சேந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் ஆற்று மணல் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
அதேபோல, இப்பகுதியில் சட்ட விரோதமாக கூழாங்கற்கள், வண்டல் மண் உள்ளிட்டவையும் இரவு நேரங்களில் அள்ளப்பட்டு, கடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார் அளித்தும், காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் “உளுந்தூர்பேட்டை பகுதியில் ஒரு நாளைக்கு மணல் அள்ள வேண்டுமென்றால் ஒரு லாரி மணல் அள்ள எனக்கு ரூ.5 ஆயிரம், உனக்கு ரூ.1,000 கொடுக்க வேண்டும். ஒரு நடை என்று கூறிவிட்டு, அனுமதி பெற்றதைவிட அதிக நடை மணல் அள்ளுவர். அதற்குத் தக்கவாறு பேரம் பேச வேண்டும்” என்று பேசிய குரல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த குரல் பதிவைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப்பை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT